காஷ்மீர் படுகொலை; அடுத்தது நீங்களாக கூட இருக்கலாம்... பயங்கரவாத குழு எச்சரிக்கை


காஷ்மீர் படுகொலை; அடுத்தது நீங்களாக கூட இருக்கலாம்... பயங்கரவாத குழு எச்சரிக்கை
x

காஷ்மீரில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் படுகொலைக்கு பொறுப்பேற்ற பயங்கரவாத குழு எச்சரிக்கை விடும் வகையிலான கடிதம் வெளியிட்டுள்ளது.



ஜம்மு,

காஷ்மீரில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் படுகொலைக்கு பொறுப்பேற்ற பயங்கரவாத குழு எச்சரிக்கை விடும் வகையிலான கடிதம் வெளியிட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் எல்லாகுவாய் தெஹாதி வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த மகள், கணவருடன் வசித்து வந்த ஆசிரியை ரஜ்னி பாலா (வயது 36) என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.

இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் அரசு பள்ளியில்ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

காஷ்மீரி பண்டிட்டான இவர் வழக்கம்போல் பள்ளியில் பணிகளை செய்து கொண்டிருந்தபோது, பள்ளி கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் அவரை சுட்டு விட்டு தப்பி சென்றனர்.

ஆசிரியை கொலைக்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீரின் பல பகுதிகளில் பெண்கள் உள்பட பண்டிட் சமூக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த மே மாதத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட் சமூகத்தின் 2வது நபர் ரஜ்னி பாலா ஆவார். கடந்த மாதம் 12ந்தேதி புத்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பட் என்பவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானார்.

சமீப நாட்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டு கொன்று வருகின்றனர். கடந்த 25ந்தேதி, ஒரு டி.வி. நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டு கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் கடந்த மே மாதத்தில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர். இந்நிலையில், இந்துக்களை குறிவைத்து படுகொலை செய்யும் சம்பவத்தின் ஒரு பகுதியாக வங்கி மேலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் இன்று சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

அவரது படுகொலைக்கு, காஷ்மீர் சுதந்திர போராளிகள் குழு பொறுப்பேற்று எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் உள்ளது. இதுபற்றி பயங்கரவாத குழு வெளியிட்டுள்ள அந்தகடிதத்தில், எங்களுடைய குழுவினரே நுண்ணறிவு சார்ந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளூர்வாசி அல்லாத, ஆனால் தங்குவதற்கு அதிகாரப்பூர்வ அரசு அனுமதி பெற்ற, வங்கி மேலாளர் விஜய் குமாரை சுட்டு கொன்றனர்.

காஷ்மீரின் வரைபட மாற்றத்தில் ஈடுபடும் எவருக்கும் இதுபோன்ற நிலைமையே ஏற்படும். அதனால், மோடி தலைமையிலான அரசு குடியமர்த்த நினைக்கும், முட்டாள்களின் சொர்க்கத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அல்லாத அனைவருக்கும் இது ஒரு பாடம் ஆக இருக்கும்.

இங்கு வசிக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு மாயையே தவிர வேறொன்றுமில்லை. அதனால் அவர்கள், தங்களது உயிரை விலையாக கொடுக்க வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. இல்லையெனில், அது நீங்களாக கூட இருக்கலாம்... என எச்சரிக்கை விடுத்து உள்ளது.


Next Story