கர்நாடகம், தெலுங்கானா, ம.பி. மாநிலங்களுடன் இணைய விரும்பும் மராட்டிய மக்கள் என்னதான் காரணம்?
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், அண்டை மாநிலங்களான கர்நாடகம், தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களுடன் தங்கள் கிராமங்கள் இணைய வேண்டும் என்று விரும்புவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தின் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள், கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதால், தங்களை கர்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் விரும்புகின்றனர்.
தெலுங்கானாவில்இணைய விரும்பும் மக்கள்
இந்த நிலையில் மராட்டியத்தில் உள்ள 14 கிராமங்கள், தங்களை அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலத்துடன் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
மராட்டிய மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே எல்லைப்பிரச்சினை இருப்பதுபோல, மராட்டிய மாநிலத்துக்கும், தெலுங்கானா மாநிலத்துக்கும் இடையேயும் எல்லைப்பிரச்சினை உள்ளது. மராட்டியத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தின் ஜிவ்டி தாலுகா மற்றும் தெலுங்கானாவின் கும்ரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தின் கெரமெரி மண்டல் பகுதியையொட்டி உள்ள 80 ச.கி.மீ. பரப்பளவில்தான் இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சினை இருக்கிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களை மராட்டிய மாநிலமும், தெலுங்கானா மாநிலமும் நிர்வகிக்கின்றன.
நலத்திட்டங்களால்ஈர்க்கப்பட்ட மக்கள்
இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் இரட்டை வாக்காளர் அடையாள அட்டை மட்டுமல்ல இரு மாநிலங்களின் ரேஷன் கார்டுகளையும் வைத்துள்ளனர்.
இந்த 14 கிராமங்களை தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு காரணம், அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ரிது பந்து, தலிதா பந்து, ரிது பீமா போன்ற நலத்திட்டங்களும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதும்தான்.
தெலுங்கானா மாநில அரசு அமல்படுத்தி வரும் நலத்திட்டங்களால் கூடுதல் பலன்களை அனுபவித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்துடன் தங்கள் கிராமங்களை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்று 14 கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவரும், ரஜூரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான சுபாஷ் ராமச்சந்திரராவ் தோட்டே, "இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் மக்களின் கோரிக்கை சட்டத்துக்கு எதிரானது, அவர்கள் மராட்டிய மாநில மக்கள்தான். அவர்கள் இங்குதான் தொடர்ந்து இருப்பார்கள்" என தெரிவித்தார்.
ம.பி.யுடன் இணைய விரும்பும் மக்கள்
இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் உள்ள 4 கிராமங்களை அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்துடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த 4 கிராமங்கள், புல்தானா மாவட்டத்தின் ஜல்கான் ஜமோத் தாலுகாவில் உள்ள பிங்காரா, கோமல்-1, கோமல்-2, சலிஸ்டாபாரி ஆகியவை ஆகும்.
இந்த 4 கிராம மக்கள், தங்கள் கிராமங்களை மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி முறைப்படி மாவட்ட நிர்வாகத்துக்கு கடந்த வாரம் மனு அனுப்பி உள்ளனர். கடந்த 75 ஆண்டுகளாக தங்களது உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமவாசிகள் தாங்கள் பழங்குடியினராக இருந்தபோதும், பழங்குடியினர் சாதிச்சான்றிதழை தாங்கள் பெறுவது மிகக்கடிமானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு டீன் கொத்தியில் இருந்து பிங்காரா கிராமம் வரையில் சாலை போடும் பணியை ஜல்கான் ஜமோத் எம்.எல்.ஏ. சஞ்சய் குண்டே முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று அந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், சாதிச்சான்றிதழ்களை வழங்கவும் தொடங்கி இருக்கிறதாம்.
கிராமவாசி கருத்து
இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கையெழுத்திட்ட பிங்காரா கிராமத்தின் சர்தார் அவாசே கூறும்போது, "இது ஒரு நல்ல நடவடிக்கை. ஆனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய கோரிக்கையான சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அனைத்து பழங்குடியினருக்கும் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "வெறும் 1½ கி.மீ. தொலைவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாங்கள் இன்னும் மின்சாரத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். சூரிய மின்சக்தியையைத்தான் சார்ந்து இருக்கிறோம்" என தெரிவித்தார்.
இப்படி மராட்டிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கிராமங்களை கர்நாடகம், தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களுடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருவது மராட்டிய அரசுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.