புதுமைகளை அறிமுகம் செய்வதில் கர்நாடகம் முதலிடம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு


புதுமைகளை அறிமுகம் செய்வதில் கர்நாடகம் முதலிடம் -  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
x

புதுமைகளை அறிமுகம் செய்வதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

பெங்களூரு

புதுமைகளை அறிமுகம் செய்வதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

கர்நாடகம் முன்னணி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வந்தார். காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கவர்னர் மாளிகைக்கு வந்த ராம்நாத் கோவிந்த், மாலையில் பெங்களூருவில் உள்ள தேசிய ராணுவ பள்ளி பவள விழாவில் கலந்துகொண்டார். இதில் அவர் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஆன்மிகம், கலை, அறிவியல், கலை, கட்டிட கலையில் கர்நாடகம் சிறந்து திகழ்கிறது. நவீன கல்வி, தொழில்நுட்பத்தில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. புதுமைகளை அறிமுகம் செய்வதில் கர்நாடகம் நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது. புதுமைகளை அறிமுகம் செய்வதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. கற்றல், தொழில்நுட்பத்தில் பெங்களூரு சர்வதேச அளவில் ஒப்பீடு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதலீட்டாளர்கள் சிறு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் நகரங்களில் உலக அளவில் முதல் 5 இடங்களில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது. கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழிகாட்டுதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகம் இந்த சாதனைகளை படைத்துள்ளது. இதற்காக நான் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

கலாசாரம்-பண்பாடுகள்

ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராணுவ பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ராணுவம் சாராதவர்களின் குழந்தைகளுக்கும் அங்கு இடம் அளிப்பது தொடங்கப்பட்டது. இந்த ராணுவ பள்ளியில் காஷ்மீர் முதல் கேரளா வரை 23 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். இதன் மூலம் அந்த மாணவர்கள் தங்களின் சக மாணவர்களின் கலாசாரம், பண்பாடுகள், வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

இந்த பள்ளியில் படித்த பலர் அரசியல், நீதித்துறை, விளையாட்டு துறை, தொழில் துறையில் ஜொலிக்கிறார்கள். தேசிய ராணுவ அகாடமியில் பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். பெண்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். பல பெண்கள் ராணுவத்தில் சாதனை படைத்து வருகிறார்கள். ராணுவத்தில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

மறக்க மாட்டார்கள்

இந்த ராணுவ பள்ளி மிக சிறப்பான பள்ளிகளில் ஒன்றாகும். ராணுவத்திற்கு கர்நாடகத்தை சேர்ந்த ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் கரியப்பாவின் பங்களிப்பை இந்தியர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அதே போல் மடிக்கேரியில் ஜெனரல் திம்மையாவின் அருங்காட்சியகத்தை கடந்த முறை கர்நாடகம் வந்தபோது திறந்து வைத்தேன். அவரது பங்களிப்பும் எப்போதும் நினைவு கூரப்படும். இந்த பள்ளியில் படித்த குர்பசன் சிங் சலாரியாவுக்கு உயரிய பரம்வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கடற்படை துணை தளபதி கோர்மொடே உள்பட ராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய ராம்நாத் கோவிந்த், இன்று (செவ்வாய்க்கிழமை) கனகபுரா ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இஸ்கான் கோவிலை திறந்து வைக்கிறார். அது திருப்பதி கோவிலை போல் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவை முடித்து கொண்டு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.


Next Story