வந்தே பாரத் ஸ்லீப்பர்: மாதிரி ஸ்லீப்பர் பெட்டியில் மத்திய ரெயில்வே மந்திரி ஆய்வு


வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தற்போது பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர், கோவை-பெங்களூர், சென்னை-விஜயவாடா, சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

முழுக்க முழுக்க ஏசி வசதியுடன் கூடிய இந்த ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளன. எனவே, நீண்ட தொலைவுக்கு இந்த ரெயில்களை இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதுதவிர, படுக்கை வசதியை விரும்பும் பயணிகள் இந்த ரெயில்களை தேர்வு செய்வதில்லை.

நெடுந்தொலைவுக்கு இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை இயக்கினால் பயணிகளிடையே வரவேற்பு இன்னும் அதிகமாகும். இதனை கருத்தில் கொண்டு இரவு நேர பயணங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு இடையே வந்தே பாரத் சேவையை அறிமுகப்படுத்தும் விதமாக வந்தே ஸ்லீப்பர் ரெயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் பெட்டிகளை பெங்களூரைச் சேர்ந்த பி.இ.எம்.எல். நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல்கட்டமாக 10 ரெயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் அனைத்து ரெயில் பெட்டிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உள்ளதுபோன்று, அனைத்து ஏ.சி. பெட்டிகளும் இருக்கும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கும். இந்த ரெயில்களின் உட்புற தோற்றம் குறித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

இந்த நிலையில், வந்தே பாரத் ரெயிலின் ஸ்லீப்பர் வெர்ஷன் பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல். ரெயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாதிரி வடிவமாக வைக்கப்பட்டுள்ள ஸ்லீப்பர் பெட்டியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஸ்லீப்பர் பெட்டியில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் மத்திய மந்திரியிடம் எடுத்துரைத்தனர்.

16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என ஐ.சி.எப். நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.


Next Story