போலீஸ் டி.ஜி.பி. பதவிக்கு 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடையே போட்டி


போலீஸ் டி.ஜி.பி. பதவிக்கு 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடையே போட்டி
x

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த பிரவீன் சூட் சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்கப்பட்டு இருப்பதால், டி.ஜி.பி. பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த பிரவீன் சூட் சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்கப்பட்டு இருப்பதால், டி.ஜி.பி. பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் போட்டி

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் பிரவீன் சூட். அவரது பணிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள பிரவீன் சூட், சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக கர்நாடக மாநில டி.ஜி.பி. பணி இடம் காலியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதிய டி.ஜி.பி. பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான அலோக் மோகன், ரவீந்திரநாத், கமல்பந்த், பிரதாப் ரெட்டி ஆகிய 4 பேர் இடையே தான் போட்டி நிலவுகிறது.

அலோக் மோகனுக்கு வாய்ப்பு

இவர்களில் அலோக் மோகன் பீகார் மாநிலத்தை சேர்ந்த கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அவர், கடந்த 36 ஆண்டுகளாக கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது தீயணைப்பு துறை போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருகிறார். பதவி மூப்பு அடிப்படையில் அலோக் மோகன் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இவருக்கு அடுத்தபடியாக டி.ஜி.பி. பதவிக்கான போட்டியில் போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஜி.பி.யாக இருக்கும் ரவீந்திரநாத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதுபோல், போலீஸ் நியமன பிரிவு டி.ஜி.பி. கமல்பந்த் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியும் இந்த போட்டியில் உள்ளனர். இவர்கள் 4 பேரில் யார்? கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக ஆவார் என்பதை புதிய அரசு அமைந்த பின்பே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.


Next Story