200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் யார்-யாருக்கு சலுகை கிடைக்கும்?; கர்நாடக அரசு திடீர் விளக்கம்


200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் யார்-யாருக்கு சலுகை கிடைக்கும்?; கர்நாடக அரசு திடீர் விளக்கம்
x

200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் யார்-யாருக்கு சலுகை கிடைக்கும் என்பது குறித்து கர்நாடக அரசு திடீரென விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் இந்த சலுகை பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் யார்-யாருக்கு சலுகை கிடைக்கும் என்பது குறித்து கர்நாடக அரசு திடீரென விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் இந்த சலுகை பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி, 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு தலா ரூ.1,500-ம், பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசியும், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டமும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

அதன்படி காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதால், அந்த 5 திட்டங்களுக்கு முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் வருகிற 11-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

அதன் தொடர்சியாக 200 யூனிட் இலவச மின்சார திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது, காங்கிரஸ் அரசு, கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களுக்கு பல்வேறு வகையான கேள்விகள் எழுந்து வருகின்றன. அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக அரசின் மின்சாரத்துறை கேள்வி-பதில் பாணியில் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

கேள்வி:- இலவச மின்சார திட்டத்திற்கு நான் தகுதியானவரா?

பதில்:- கா்நாடகத்திற்குள் உள்ள அனைத்து குடியிருப்பு மின் நுகர்வோரும் இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள்.

கேள்வி:- இந்த திட்டம் குறித்து சிறிது விளக்கமாக கூற முடியுமா?

பதில்:- கர்நாடக அரசு கிரகஜோதி திட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் உள்ள வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்

கேள்வி:- இந்த இலவச மின்சார திட்டத்தின் சலுகையை பெற நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்:- இந்த திட்டத்தின் சலுகையை பெற விரும்புகிறவர்கள் மாநில அரசின் சேவா சிந்து இணையதள சேவை பக்கத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் பணி வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.

கேள்வி:- இந்த திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும்?

பதில்:- இலவச மின்சார திட்டம் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆகஸ்டு மாத மின் கட்டண ரசீதில் இந்த திட்டத்தின் பயன் கிடைக்கும்.

கேள்வி:- இந்த திட்டத்தின் பயன் பெற நான் எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

பதில்:- பெங்களூரு ஒன், கர்நாடக ஒன், கிராம ஒன் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அனைவரும் சேவா சிந்து இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

கேள்வி:- ஆன்லைன் மூலமாக அல்லாமல் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாமா?

பதில்:- ஆம், நேரடியாகவும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்புகை தகவல்

கேள்வி:- விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

பதில்:ஆதார் எண், மின் இணைப்பு எண் அதாவது மின் நுகர்வோர் எண், கணக்கு எண், வாடகை வீடாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், குத்தகை (லீஸ்) ஒப்பந்த பத்திரம், வீட்டு முகவரியை காட்டும் வாக்காளர் அடையாள அட்டை.

கேள்வி:- விண்ணப்பிக்க நான் ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா?

பதில்:- சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.

கேள்வி:- ஜூன் மாத மின் கட்டணத்தை செலுத்த வேண்டுமா?

பதில்:- ஆம். ஜூலை 1-ந் தேதி முதல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை. இந்த கட்டணத்திற்கான 'பில்' ஆகஸ்டில் கிடைக்கும்.

கேள்வி:- விண்ணப்பித்த பிறகு ஒப்புகை தகவல் கிடைக்குமா?

பதில்:- ஆம், விண்ணப்பித்த பிறகு சம்பந்தப்பட்டவரின் மின்னஞ்சல் அல்லது செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

கேள்வி:- நான் விண்ணப்பித்துவிட்டேன், எனக்கு எப்போது சலுகை கிடைக்கும்?

பதில்:- ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டுள்ள கட்டண 'பில்' தொகையை செலுத்த வேண்டும். ஆகஸ்டு மாத 'பில்' கட்டணத்தில் தான் சலுகை கிடைக்கும்.

வாடகை வீட்டில் வசிப்போர்

கேள்வி:- நான் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசிக்கிறேன், நான் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்:- ஆம், தனியாக மீட்டர் பயன்படுத்த வேண்டும். அதாவது தனி மின் இணைப்பு இருக்க வேண்டும்.

கேள்வி:-நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன், மின் கட்டண 'பில்' வீட்டு உரிமையாளர் பெயரில் உள்ளது. எனக்கு இந்த சலுகை கிடைக்குமா?

பதில்:- வாடகை வீட்டில் வசிப்போரும் விண்ணப்பிக்க முடியும். உாிய முகவரி ஆதாரத்துடன் வாடகை ஒப்பந்த பத்திரத்தை வழங்க வேண்டும்.

கேள்வி:- நான் 2 மாதங்களுக்கு முன்பு தான் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வாடகை வீட்டில் குடியேறினேன். எனக்கு இந்த சலுகை கிடைக்குமா?

பதில்:- ஆம், புதிய மின் இணைப்புகள் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

கேள்வி:- நான் கடையின் உரிமையாளர், எனது இந்த வணிக கட்டிடத்திற்கு சலுகை கிடைக்குமா?

பதில்:- இல்லை, இந்த இலவச மின்சார திட்டம் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

கேள்வி:- எவ்வளவு யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும், எனக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்குமா?.

பதில்:- 2022-23-ம் நிதி ஆண்டின் 12 மாதங்கள் பயன்படுத்தப்பட்ட மின் நுகர்வை கணக்கிட்டு அதை 12 மாதங்களுக்கு சராசரியாக பிரிக்கப்படும். அதில் வரும் மாத சராசரியை விட கூடுதலாக 10 சதவீதம் இலவசமாக வழங்கப்படும். இது 200 யூனிட் மின்சாரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதார் எண் இணைப்பது கட்டாயம்

கேள்வி:- எனது மின் இணைப்பு கணக்கு அடையாள எண் எங்கே உள்ளது?

பதில்:- இந்த கணக்கு எண் மாதாந்திர மின் கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி:- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டுமா?

பதில்:- ஆம், ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண், கணக்கு எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

கேள்வி:- எனது ஆதார் எண் பிற மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது, . அதனால் எனக்கு இந்த திட்டத்தின் சலுகை கிடைக்குமா?.

பதில்:- ஆம், நீங்கள் கர்நாடகத்திற்குள் எங்கு வசித்தாலும், அதற்கான வீட்டு முகவரி ஆதாரத்தை வழங்கினால் நீங்கள் சலுகையை பெற தகுதியானவர்.

கேள்வி:- மின் கட்டண பாக்கி வைத்திருந்தால், இந்த திட்டத்தின் சலுகை கிடைக்குமா?

பதில்:- ஆம், ஆனால் ஜூன் மாதம் வரையிலான கட்டண பாக்கியை 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

கேள்வி:- எனக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு நான் கட்டணம் செலுத்தாவிட்டால், திட்டத்தின் பயன் கிடைக்காதா?

பதில்:- இல்லை, ஆனால் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் வினியோகம் துண்டிக்கப்படும். பாக்கியை செலுத்தினால், திட்டத்தின் பயனை பெற முடியும்.

குறைவான மின்சாரம்

கேள்வி:- மின் இணைப்பு எனது தந்தையின் பெயரில் உள்ளது, அவர் இறந்துவிட்டார், நான் எப்படி விண்ணப்பிப்பது?.

பதில்:- மின் இணைப்பை உங்களின் பெயருக்கு மாற்றி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து துணை மின் நிலைய அலுவலகங்களில் உள்ள ஜன சினேகி மையங்களில் இந்த பெயர் மாற்றல் பணி நடக்கிறது.

கேள்வி:- நான் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால், ஒட்டுமொத்த 'பில்' தொகையும் செலுத்த வேண்டுமா?

பதில்:- ஆம், அந்த மாதத்திற்கு மட்டும் நீங்கள் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும்.

கேள்வி:- நான் எனக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், நான் எவ்வளவு கட்டணத்தை செலுத்த வேண்டும்?

பதில்:- உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட நீங்கள் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், உங்களுக்கு பூஜ்ஜிய 'பில்' வழங்கப்படும். நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

அனுமதிக்கப்பட்ட அளவு

கேள்வி:- நான் அனுமதிக்கப்பட்ட அளவை விட சற்று கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அதற்கு கட்டணம் உண்டா?

பதில்:- ஆம், உதாரணமாக நீங்கள் சராசரியாக மாதம் 70 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறீர்கள். அதை விட கூடுதலாக 7 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கும் மேல் 200 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அந்த கூடுதல் மின்சார பயன்பாட்டிற்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதில் நிரந்தர கட்டணம், வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும்.

கேள்வி:- நான் சராசரியாக மாதம் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகிறேன். இதில் எனக்கு சலுகை கிடைக்குமா?.

பதில்:- இல்லை, 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகிறவர்கள் ஒட்டுமொத்த 'பில்' தொகையையும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story