கர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினை வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுமா?
எல்லை பிரச்சினை தொடர்பாக தற்போது இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பெங்களூரு,
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பெலகாவி தங்களுக்கே சொந்தம் என்று மராட்டியம் கூறி வருகிறது. ஆனால் எல்லை பிரச்சினை எழும் போதெல்லாம் பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று கர்நாடகம் அந்த மாநிலத்திற்கு பதிலடி தருகிறது. இந்த எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக தற்போது இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 30-ந் தேதி(அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த மாவட்டத்திலும், மராட்டிய எல்லையிலும் கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் எல்லை பிரச்சினை தொடர்பான மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி வேறு ஒரு வழக்கை விசாரிக்க இருப்பதால், எல்லை பிரச்சினை மனு மீதான விசாரணை தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை குறித்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறுமா? என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.