மராட்டியம்-கர்நாடகம் இடையே 60 ஆண்டுகளாக தொடரும் எல்லைப் பிரச்சினை


மராட்டியம்-கர்நாடகம் இடையே 60 ஆண்டுகளாக தொடரும் எல்லைப் பிரச்சினை
x

இன்று.... நேற்று... தொடங்கியது அல்ல இந்த எல்லைப் பிரச்சினை. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து மராட்டியம் - கர்நாடகம் இடையே எல்லை விவகாரம் ஏற்பட்டது.

கர்நாடகமும், மராட்டியமும் அண்டை மாநிலங்கள் ஆகும். கர்நாடகத்தில் உள்ள பெலகாவியை மராட்டியமும், மராட்டியத்தில் உள்ள சோலாப்பூரை கர்நாடகமும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. அவ்வப்போது, கர்நாடக எல்லையில் உள்ள மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை தங்கள் மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்று மராட்டிய அரசியல்வாதிகள் கூறுவதும், மராட்டிய எல்லையில் கன்னடம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை தங்கள் மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்று கர்நாடக அரசியல்வாதிகள் கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்த எல்லை பிரச்சினை எழும்போது எல்லாம் இரு மாநிலங்களின் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும். அதே போல் தான் தற்போது இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை எழுந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது சுப்ரீம் கோர்ட்டில் எல்லை பிரச்சினை குறித்த வழக்கு விசாரணை நடைபெறுவதால், இரு மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. 60 ஆண்டுகள் ஆகியும் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவது ஏன்?, இதுவரை நடந்த விஷயங்கள் என்ன என்பதை சற்று திரும்பி பார்போம்.

எல்லைகளை வரையறுக்க...

மத்திய அரசு கொண்டு வந்த மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க கடந்த 1953-ம் ஆண்டு நீதிபதி பஜல்அலி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு உறுப்பினர்களாக கே.எம்.பனிக்கர், இருதயநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அந்த குழு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு 1955-ம் ஆண்டு தனது அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின்படி, 1960-ம் ஆண்டு மராட்டியம், குஜராத் ஆகியவை சுதந்திர மாநிலங்களாக உருவெடுத்தன. மொத்தம் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. அதுவரை பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்த பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை ஆகிய பகுதிகள் மைசூரு மாகாணத்தில் சேர்க்கப்பட்டன.

கர்நாடகம் எதிர்ப்பு

இதற்கு அப்போதைய மராட்டிய மாநிலம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெலகாவி மற்றும் அதனை ஒட்டியுள்ள மராத்தி மொழி அதிகம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை தங்கள் மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்று அந்த மாநிலம் வலியுறுத்த தொடங்கியது. இதையடுத்து கடந்த 1966-ம் ஆண்டு மத்திய அரசு, இந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில் மெஹர்சந்த் மகாஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது.

அந்த குழு அமைத்தபோது, அதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அந்த குழு தனது ஆய்வு பணியை முடித்து அறிக்கை வழங்கியது. அந்த அறிக்கையில், பெலகாவி உள்ளிட்ட பகுதிகள் கர்நாடகத்தில் தான் நீடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதை ஆதரித்து கர்நாடக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

எல்லை பிரச்சினை

ஆனால் மகாஜன் அறிக்கையை மராட்டியம் நிராகரித்தது. அந்த அறிக்கைக்கு எதிராக அம்மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு 1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அதன் பிறகு கர்நாடகம்-மராட்டியம் இடையேயான இந்த எல்லை பிரச்சினை மீண்டும் உருவெடுத்தது.

அதைத்தொடர்ந்து அந்த இரு மாநிலங்கள் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை அடிக்கடி எழுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு, பெலகாவியை மராட்டியத்துடன் சேர்க்குமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய மாநிலம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதற்கிடையே சட்டசபை தேர்தல் வரும்போது எல்லாம், இந்த எல்லை பிரச்சினை எழுவதும், அதன் பிறகு அமைதியாகி விடுவதுமாக உள்ளது.

பிரமாண பத்திரம்

கடந்த 2006-ம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், மாநிலங்களை உருவாக்குவது, அவற்றின் எல்லைகளை மாற்றி அமைப்பது நாடாளுமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், அதனால் மராட்டியத்தின் மனு சட்டவிரோதம் என்றும் கூறியது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு மராட்டிய மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மராட்டியம் வழக்கு தாக்கல் செய்து 18 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த மாநிலம் சுமார் 16 இடைக்கால மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா, இந்த வழக்கை விசாரித்து ஆவணங்களை சேகரிக்க ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டார். 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அந்த குழுவுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. இதற்கிடையே நீதிபதி ஆர்.எம்.லோதா ஓய்வு பெற்றுவிட்டார்.

சட்டசபை தேர்தல்

அதன் பிறகு தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டு, மராட்டியத்தின் மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து முதலில் முடிவாக வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் அவரும் ஓய்வு பெற்றுவிட்டார். அதன் பிறகு மராட்டியத்தின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவே இல்லை. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் எல்லை பிரச்சினை எழுந்துள்ளது. மராட்டியம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடக்கிறது. அதனால் இரு மாநிலங்களும் எல்லை பிரச்சினை வழக்கில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. மராட்டிய அரசு இந்த வழக்கில் தனிக்கவனம் செலுத்த 2 மந்திரிகளை நியமித்துள்ளது. கர்நாடக அரசும், மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி தலைமையில் ஒரு வலுவான சட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இரு மாநிலங்கள் இடையேயான இந்த எல்லை பிரச்சினை தீராத விவகாரமாக நீடித்து கொண்டே செல்கிறது.

இந்த விவகாரத்தில் மராட்டியம் தாக்கல் செய்த வழக்கு விசாரணை 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் எல்லை விவகார வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து இரு மாநில அரசுகளும் காத்து இருந்து வருகின்றன.


Next Story