நாட்டின் முன்னோடி மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெருமிதம்


நாட்டின் முன்னோடி மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது;  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெருமிதம்
x

நாட்டின் முன்னோடி மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

மங்களூரு;

சுற்றுப்பயணம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடுப்பியில் உள்ள கார்கலா தாலுகாவில் எண்ணெய்கோலே அணை கட்டிற்கு சென்று பாகினாபூஜை செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், ரூ.40 கோடிக்கான நலத்திட்டங்களை செய்து கொடுக்க மந்திரி சுனில் குமார் கேட்டு கொண்டார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும். கொரோனா காலத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது. மேலும், அதுதொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு உண்மை தன்மையுடன் வழங்கியது. கர்நாடக மாநிலம், இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

அனைத்து துறைகளிலும் நமது மாநிலம் முதலிடம் பிடிக்க வேண்டும். அதற்கு மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு பொது மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஹிஜாப் விவகாரத்தில் அரசின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். யாரும் சட்டத்தை மீறக்கூடாது.

நலத்திட்ட உதவிகள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டில் பல்வேறு துறைகள் எழுச்சி கண்டுள்ளன. அதில் கர்நாடகத்தின் பங்கும் உண்டு. கர்நாடக அரசின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த அறிக்கை நிறைவு பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கர்நாடக அரசின் பள்ளி பாடத்திட்டங்களில் பசவண்ணர், குவெம்பு குறித்த முக்கிய குறிப்புகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வாழக்கை குறிப்புகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அறிக்கை வெளியானதும், பள்ளி பாட புத்தகங்களில் உள்ள குறிப்புகள் மாற்றுவது அல்லது திருத்தம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உடுப்பியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Next Story