மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு 'கெடு'


மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு
x
தினத்தந்தி 30 May 2022 3:34 AM IST (Updated: 30 May 2022 3:35 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளில் 90 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.

பெங்களூரு:

சிறப்பு கோர்ட்டு

கர்நாடகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு பெங்களூருவில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தின் எந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, அவர் தொடர்பான வழக்கு இந்த சிறப்பு கோர்ட்டில் நடைபெறும். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் சுஜித் மல்குந்த் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

அதில் பெலகாவி தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அபய்குமார் பட்டீல் மீது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் ஊழல் புகார் ஒன்றை கூறியதாகவும், 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி இருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி சுனில்தத் யாதவ் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விசாரணை முடிக்க வேண்டும்

சாட்சிகள் மற்றும் புகார்தாரரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சாதாரண வழக்கில் 60 நாட்களிலும், தீவிரமான வழக்கில் 90 நாட்களிலும் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணை அதிகாரிகள் சரியான காரணத்தை கூறி காலஅவகாசம் கேட்டால், மாஜிஸ்திரேட்டு விசாரணை காலத்தை நீட்டிக்கலாம். விசாரணையில் ஏதாவது தலையீடு இருந்தால் அதுபற்றி போலீசார் மாஜிஸ்திரேட்டின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

விசாரணை நடத்த தனி விசாரணை பிரிவை ஏற்படுத்த வேண்டும். அதில் பணியாற்றுபவர்கள் உரிய பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த சிறப்பு கோர்ட்டில் அரசு சார்பில் ஆஜராகி வாதாட தகுதியான, திறமையான வக்கீல்களை நியமிக்க வேண்டும். கர்நாடக அரசு மேலும் ஒரு இத்தகைய சிறப்பு கோர்ட்டை அமைக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஊழல் புகார்

மேலும் மனுதாரர், தனக்கு அபய்குமார் பட்டீல் மிரட்டல் விடுப்பதாகவும், ஊழல் புகாரை வாபஸ் பெறும்படி இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறி இருந்தார். அபய்குமார் பட்டீல் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story