சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது - சஞ்சய் ராவத்


சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது - சஞ்சய் ராவத்
x

சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது என்று சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த தோல்வியால் பா.ஜனதாவுக்கு தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கிய கர்நாடகத்தை அக்கட்சி இழந்துள்ளது. மேலும் தென்இந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பா.ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நி்லையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது. காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது அப்படியென்றால் கடவுள் அனுமன் காங்கிரசுடன் உள்ளார் பாஜகவுடன் இல்லை என்பதை காட்டுகிறது. பாஜக தோல்வியடைந்தால் வன்முறை வெடிக்கும் என்று நமது உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கர்நாடகா அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்கு வன்முறை நடைபெறுகிறது?

பிரதமர் மோடி அலை ஓய்ந்து இப்போது நாடு முழுவதும் எங்கள் அலை வந்து கொண்டிருக்கிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தம் தொடங்கிவிட்டது. சரத் பவார் தலைமையில் இன்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2024 தேர்தல் குறித்து விவாதித்து அதற்கான ஆயத்தத்தைத் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story