கர்நாடகத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுதொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம்
இந்தியாவில், சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இதை களைந்து பொதுவான ஒரு சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
திருமணம், விவகாரத்து, வாரிசு, சொத்துரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியாக சட்டங்கள் உள்ளன.
எனவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது மத்திய ஆளும் பா.ஜனதா அரசின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு சிறுபான்மையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவது ஏற்புடையதல்ல என்பதும் அவர்களின் வாதமாக உள்ளது.
அமித்ஷா உறுதி
இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பொதுசிவில் சட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும் என்று கூறினார். மேலும் நாடு, மாநிலங்கள் மதச்சார்ப்பற்றதாக இருக்கின்றன. பிறகு எப்படி ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப ஒரு சட்டங்கள் இருக்க முடியும். அனைத்து மதத்தினருக்கும் நாடாளுமன்றம், சட்டசபைகளில் நிறைவேற்றிய சட்டம் தான் இருக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ெபாதுசிவில் சட்டம் விைரவில் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் ெபாம்ைம அறிவித்துள்ளார். அதாவது பெங்களூரு விதானசவுதாவில் நேற்று இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்ேகற்ற பிறகு முதல்-மந்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் விரைவில் அமல்
தேசிய அளவில் பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாகும். பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெற்றிருந்தது. அந்த பொது சிவில் சட்டத்தை கர்நாடகத்தில் அமல்படுத்துவதற்கு அரசும் தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களை மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்த மாநிலங்களிடம் இருந்தும் தகவல்கள் சேகரிக்கப்படும். பொதுசிவில் சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து சிவமொக்காவில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும்
இந்திய அரசியலமைப்பு சமத்துவம், சகோதரத்துவம் பற்றி எடுத்து கூறுகிறது. தீனதயாள் உபாத்யாயா காலத்தில் இருந்தே நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் குறித்து பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகிறோம். இந்த பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில அளவில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை தற்போது அமலுக்கு கொண்டு வருவது குறித்து சிந்தனை நடத்தப்படுகிறது.
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த சரியான நேரம் வரும் போது, அதை செயல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இருக்கிறது. இதன்மூலம் மக்கள் நலனை சாத்தியமாக்கவும், சமத்துவத்தை கொண்டு வரவும் முடியும். இதனை செயல்படுத்த அனைத்து வலுவான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
மதமாற்ற தடை சட்டம்
கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருவதுடன், அரசியலமைப்பு எதிரான சட்டம் என்று கூறி வருகிறாா்கள். கட்டாய மதமாற்றம் மிகப்பெரிய குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூட தீர்ப்பு கூறி உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு பக்தர்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதனை பா.ஜனதா அரசும் உறுதியாக நம்புகிறது. இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.