கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.), கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.), கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகம் (கே.கே.எஸ்.ஆர்.டி.சி.), வடமேற்கு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் பழுதடைந்த பஸ்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 4 போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக பஸ்கள் வாங்க மொத்தம் ரூ.500 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது கே.எஸ்.ஆர்.டி.சி., கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகங்களுக்கு தலா ரூ.100 கோடியும், பி.எம்.டி.சி. மற்றும் வடமேற்கு போக்குவரத்து கழகத்திற்கு தலா ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பஸ்களை வாங்குவது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி 4 போக்குவரத்து கழகங்களுக்கும் போக்குவரத்து கழக இணை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த அறிக்கை தாக்கல் செய்த பிறகு, இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.