கர்நாடக தேர்தல்: 'முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்' - ம.ஜ.த. தலைவர் குமாரசாமி
கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் எங்களை தொடர்புகொள்ளவில்லை என குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவே கூறி இருப்பதால், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தற்போதே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா, குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். 30 முதல் 32 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் எங்களை தொடர்புகொள்ளவில்லை.
தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் அமோக வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சின்ன கட்சி, எங்களுக்கு பெரும் முக்கியத்துவம் இல்ல. இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். நல்ல வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.