பிரதமர் மோடி பயண சாலையில் பழுதாகி நின்ற குப்பை லாரி, தனியார் பஸ்


பிரதமர் மோடி பயண சாலையில் பழுதாகி நின்ற குப்பை லாரி, தனியார் பஸ்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி பயண சாலையில் குப்பை லாரி, தனியார் பஸ் ஆகியவை பழுதாகி நின்ற சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக நேற்று முன்தினம் பிரதமர் மோடி பீதர் வந்தார். அவர் பீதர், விஜயாப்புரா, பெலகாவி ஆகிய 3 இடங்களில் நடந்த பிரசார கூட்டங்களிலும், பெங்களூருவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு வேட்டையாடினார். இரவில் ராஜ்பவனில் தங்கிய பிரதமர் மோடி நேற்று கோலாருக்கு புறப்பட்டு சென்றார். இதையொட்டி ராஜ்பவன் ரோட்டில் இருந்து எச்.ஏ.எல். விமான நிலையம் வரை மோடி காரில் பயணம் செய்தார். இதனால் சாலையில் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக பிரதமர் மோடி பயணம் செய்வதற்கு சற்று முன்பு ஐ.டி.சி. வின்ட்சர் மேனருக்கு அருகில் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி ஒன்று திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் போலீசார் அவசரம், அவசரமாக அந்த லாரியை சாலையோரம் தள்ளி விட்டனர்.

அதுபோல் காவேரி சந்திப்பு அருகே தனியார் பஸ் ஒன்று பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, பழுதடைந்த பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி பயணத்தின் போது நடுரோட்டில் பழுதாகி நின்ற குப்பை வாகனம், தனியார் பஸ்சால் போலீசார் பரிதவித்ததை காண முடிந்தது.


Related Tags :
Next Story