கர்நாடக முதல்-மந்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கர்நாடக முதல்-மந்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 6 Feb 2024 10:34 AM (Updated: 6 Feb 2024 10:40 AM)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மார்ச் 6ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கடந்த 2022-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின் போது, காண்ட்ராக்டராக இருந்த சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பியில் உள்ள ஒரு லாட்ஜில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கும் முன்னாள் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்போதைய முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மையின் இல்லத்தை நோக்கி சட்டவிரோதமாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தற்போதைய முதல்-மந்திரி சித்தராமையா, உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை மந்திரி எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு இன்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். மேலும், சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ரூ.10,000 அபராதம் விதித்து, கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, முதல்-மந்திரி சித்தராமையா மார்ச் 6ம் தேதியும், போக்குவரத்துத் துறை மந்திரி ராமலிங்க ரெட்டி மார்ச் 7ம் தேதியும், காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மார்ச் 11ம் தேதியும், உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை மந்திரி பாட்டீல் மார்ச் 15ம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story