கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி 17-ந்தேதி தாக்கல்
கா்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கா்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
முதல் கூட்டுக்கூட்டம்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டுக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. இந்த கூட்டுக்கூட்டத்தொடர் பசவராஜ்பொம்மை தலைமையிலான அரசின் இறுதி சட்டசபை கூட்டம் என்பதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடர் தேதி முடிவு செய்வதற்காக இன்னும் ஓரிரு நாளில் சபாநாயகர் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது. இதற்கு வருகிற 17-ந்தேதி நடைபெறும் மந்திரிசபை ஒப்புதல் அளிக்க உள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெண்களுக்கான திட்டங்கள்
கர்நாடக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 17-ந் தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. எனவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது சகஜமானது தான். மக்களுக்கான பல நல்ல திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும். பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்து காலதாமதம் செய்யாமல், சரியான நேரத்தில் நிறைவேற்றப்படும்.
குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டும் விதமாகவும், ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வாழ்க்கையை சிறப்பாக நடத்திவிடும் விதமான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். அதே நேரத்தில் பெண்களுக்கான திட்டங்கள், பெண்கள் பெயரிலான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
மந்திரிசபை கூட்டம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து இந்த ஆண்டின் முதல் கூட்டு கூட்டத்தொடர் நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும். மத்திய பட்ஜெட்டும் இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு தேவையான நிதி, பிற உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
பட்ஜெட்டில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் விதமாகவும், அடிப்படை வசதிகள் எளிதில் மக்களை சென்றடையும் விதமாகவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திட்டத்தை செயல்படுத்த முடியாது
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கியது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு தான் மின்வாரியங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது. பா.ஜனதா அரசு கொடுத்த நிதியால் தற்போது மின் வாரியங்கள் கடனில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும், அதனை செயல்படுத்த முடியாது என்று தெரியும்.
மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது. இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தால் மாநிலத்தில் நிதி தட்டுப்பாடு ஏற்படும். காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சதாசிவ கமிட்டி அறிக்கை, காந்தராஜ் அறிக்கையை அமல்படுத்தவில்லை. பஞ்சமசாலி சமுதாயத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.
கர்நாடக கலாச்சாரம் இல்லை
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காசப்பனவர் பஞ்சமசாலி சமுதாய தலைவராக இருந்த போது எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரது தந்தை முன்னாள் மந்திரி ஆவார். அப்படி இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சியில் என்ன காரணத்திற்காக பஞ்சமசாலி சமுதாயத்திற்கு 2ஏ இட ஒதுக்கீடு வழங்கவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக காந்தராஜ் தாக்கல் செய்த அறிக்கையை காங்கிரஸ் நிராகரித்து இருந்தது.
இடஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்று காங்கிரஸ் ஆட்சியில் தான் சொல்லப்பட்டது. அப்போது என்ன காரணத்திற்காக காசப்பனவர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. தற்போது இடஒதுக்கீடு கேட்டு நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க என்ன தகுதி இருக்கிறது. மந்திரி முருகேஷ் நிரானி மீது யத்னால் எம்.எல்.ஏ. தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருவது பற்றி எனது கவனத்திற்கு வந்தது. அரசியலில் குற்றச்சாட்டுகள் கூறுவது சகஜம் தான். ஆனால் சொந்த விவகாரங்கள் குறித்து யாரும் கருத்து சொல்லக் கூடாது. இது கர்நாடகத்தின் கலாசாரமும் இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.