கர்நாடகா: லஞ்ச வழக்கில் முன்ஜாமின் பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பா, 5 நாட்களுக்குப் பிறகு இன்று தனது சொந்த தொகுதிக்கு திரும்பினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகம் மற்றும் வீட்டில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. இந்த லஞ்ச வழக்கு தொடர்பாக மாடால் விருபாக்ஷப்பா, பிரசாந்த் உள்பட 5 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீது வழக்குப்பதிவு என அறிந்ததும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய லோக் அயுக்தா போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கர்நாடக ஐகோர்ட்டில் மாடால் விருபாக்ஷப்பா சார்பில் நேற்று முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ரூ.5 லட்சம் பிணை தொகை மற்றும் உத்தரவாதத்துடன் கூடிய நிபந்தனையின் பேரில் இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பா, 5 நாட்களுக்குப் பிறகு இன்று தனது சொந்த தொகுதிக்கு திரும்பினார். கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று திரும்பிய அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகளை வெடித்தும், பூக்களைத் தூவியும் தொண்டர்கள் அளித்த வரவேற்பை எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பா உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார்.