கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு: 'மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்துடன் அளித்த தீர்ப்பு' - அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே


கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு: மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்துடன் அளித்த தீர்ப்பு - அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோபத்துடன் தீர்ப்பு அளித்து உள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

கா்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மோசமான ஆட்சி நிர்வாகம்

காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்களை இன்று (நேற்று) மாலைக்குள் பெங்களூருக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் பெங்களூரு வந்ததும் அடுத்தக்கட்ட பணிகளை நாங்கள் தொடங்க உள்ளோம். அதன் பிறகு கட்சி மேலிட பார்வையாளர்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கும். அதைத்தொடா்ந்து புதிய அரசை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். தேர்தல் முடிவுகள் மக்களின் வெற்றியை காட்டுகிறது. மக்களே முன்வந்து காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளனர். மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோபத்துடன் அளித்த தீர்ப்பு. கர்நாடக வாக்காளர்கள் விழிப்படைந்துவிட்டதை தேர்தல் முடிவு காட்டுகிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள், பிற மாநிலங்களின் பா. ஜனதா முதல்-மந்திரிகள், பண பலம், அதிகார பலம், படை பலம் என அனைத்து பலங்களையும் பா.ஜனதா பயன்படுத்தியது. இருப்பினும், மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளனர்.

வாக்குறுதிகளுக்கு பலன்

மக்கள் நல்ல பணிகளை ஆதரிக்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றியதால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது. மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளும் நல்ல பலனை வழங்கியுள்ளது. அதனால் தான் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.


Next Story