கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்துடன் எல்லை பிரச்சினைக்கு மத்தியில் பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு:

மராட்டியத்துடன் எல்லை பிரச்சினைக்கு மத்தியில் பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

சட்டசபை நாளை கூடுகிறது

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் கூடுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 19-ந் தேதியில் இருந்து டிசம்பர் 30-ந் தேதி வரை பெலகாவி சுவர்ணசவுதாவில் நடத்துவது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) பெலகாவி சுவர்ணசவுதாவில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதாவது வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை), 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர்த்து 10 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடைடெபற உள்ளது.

வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு

பெலகாவி சுவர்ணசவுதாவில் குளிர்கால கூட்டத்தொடரை எந்த விதமான பிரச்சினையும் இன்றி நடத்துவதற்கான ஏற்பாடுகளை பெலகாவி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தயாராகி வரும் நிலையில், பெலகாவியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடரில் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பி அரசை இக்கட்டில் சிக்க வைக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தயாராகி வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்கள் திருட்டு, வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருக்கிறது. இதே விவகாரத்தை கையில் எடுக்கவும் ஜனதாதளம் (எஸ்) கட்சியும் தீர்மானித்துள்ளது.

வளர்ச்சி பணிகளுக்கான திட்டங்கள்

இதுபோல், அரசின் ஊழல், 40 சதவீத கமிஷன் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தயாராகி வருகிறார். குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது குறித்து மூத்த மந்திரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

மேலும் மராட்டியத்துடனான எல்லை பிரச்சினைக்கு மத்தியில் இந்த கூட்டத்தொடர் நடப்பதால், பெலகாவி உள்ளிட்ட எல்லை பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அறிவிக்கவும், இதற்காக பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டமிட்டு உள்ளதாகவும், அதுபற்றி கூட்டத்தொடர் நடைபெறும் போது அவர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

எல்லை பிரச்சினை

அதே நேரத்தில் பெலகாவி எல்லை பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்துடன், மராட்டிய அரசு மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அந்த மாநில மந்திரிகள் பெலகாவிக்கு வருவதாக அறிவித்திருந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவியில் வாகனங்கள் மீது கற்கள் வீச்சு, போராட்டம் என பதற்றமான சூழ்நிலை நிலவியது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 2 மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு குழுவையும் அமைத்துள்ளார்.

ஆனாலும் எல்லை பிரச்சினையை கையில் எடுத்து மராட்டிய அரசு அரசியல் செய்து வருகிறது. இதனால் பெலகாவி சுவர்ணசவுதாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெலகாவி போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா தலைமையில், 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 45 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

144 தடை உத்தரவு

மேலும் பெலகாவி சுவர்ணசவுதாவை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தியும் போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். சுவர்ணசவுதாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்காக கூடாரம் மற்றும் குளிப்பதற்காக வெந்நீர் உள்ளிட்ட வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரின் போது அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி உள்ளன.

போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டு விவசாய சங்கங்கள், கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட 80 அமைப்புகள் சார்பில் போலீசாரிடம் மனு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அதில் சில அமைப்புகளுக்கு போராட்டத்தில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசு அலுவலகங்கள் மாற்றம்

குளிர்கால கூட்டத்தொடருக்காக பெலகாவி சுவர்ணசவுதாவை சுற்றி வர்ணம் பூசுதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பெலகாவியே வண்ண மயமாகி உள்ளது. மேலும் பெங்களூரு விதானசவுதாவில் செயல்படும் முக்கிய அரசு அலுவலகங்கள், பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதாவுக்கு மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதா வெறும் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவதற்கு மட்டும் பயன்பட்டு வருவதாகவும், வடகர்நாடகம் சம்பந்தப்பட்ட துறைகள், அலுவலகங்கள் சுவர்ணசவுதாவுக்கு மாற்றப்படாமல் இருப்பதாகவும் கன்னட அமைப்புகள், வடகர்நாடக மாவட்ட மக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.


Next Story