கார்கில் போர் நாயகனான வீரர் சிவாங் முரோப் சாலை விபத்தில் பலி


கார்கில் போர் நாயகனான வீரர் சிவாங் முரோப் சாலை விபத்தில் பலி
x

கார்கில் போரில் ஈடுபட்டு வீர் சக்ரா விருது வென்ற வீரர் சிவாங் முரோப் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகால எல்லை பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும், கடந்த 1999-ம் ஆண்டு அப்போது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர்.

இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மிக தீவிர போர் மூண்டது. இதனால், இந்த போரானது கார்கில் போர் என அழைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் இந்த ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவின் பேச்சுவார்த்தை முயற்சியையும் பாகிஸ்தான் நிராகரித்தது.

சவால்கள் நிறைந்த, மிக பெரிய மலைத்தொடரில் நடந்த இந்த போரில் இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுத்தது. இந்த சண்டையில் 500-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்து கார்கில் போர் வெற்றியை மீட்டெடுத்தனர்.

இந்த கார்கில் போரில் தீரமுடன் ஈடுபட்டவர் சுபேதார் மேஜர் பதவி வகித்த சிவாங் முரோப். போரில் வெற்றி பெற போராடிய அவருக்கு அரசு சார்பில் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், லே பகுதியில் நேற்றிரவு நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்து உள்ளார்.

இதனால், அவரது கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவரது குடும்பத்தினரை லெப்டினன்ட் ஜெனரல் ராஷிம் பாலி நேரில் சந்தித்து உள்ளார். அவரின் தந்தையான நாயப் சுபேதார் செரிங் முதோப், என்பவரை நேரில் சந்தித்து இந்திய ராணுவம் சார்பில் ஆறுதல் கூறினார். அவரும் படை வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அசோக சக்ரா விருதும் பெற்று உள்ளார்.


Next Story