கன்வார் யாத்திரை உத்தரவு; பெயரை மறைக்க தேவையில்லை - பாபா ராம்தேவ் கருத்து


கன்வார் யாத்திரை உத்தரவு; பெயரை மறைக்க தேவையில்லை - பாபா ராம்தேவ் கருத்து
x

தங்கள் பெயரை யாரும் மறைக்க தேவையில்லை என கன்வார் யாத்திரை உத்தரவு குறித்து பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவ பக்தர்கள் 'கன்வார்' யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை மேற்கொள்பவர்கள் 'கன்வாரியாக்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இந்த யாத்திரையின்போது ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பின்னர் அந்த புனித நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

இதனிடையே உத்தர பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கன்வார் யாத்திரை வரும் 22-ந்தேதி தொடங்க உள்ளதால் உத்தர பிரதேசம் முழுவதும் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான உத்தரவு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தங்கள் பெயரைப் பற்றி எல்லோரும் பெருமைப்பட வேண்டும் எனவும், பெயரை மறைக்க தேவையில்லை எனவும் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதில் ராம்தேவுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றால், ரகுமானுக்கு மட்டும் என்ன சிக்கல் இருக்கப்போகிறது?

எல்லோரும் தங்கள் பெயரைப் பற்றி பெருமைப்பட வேண்டும். பெயரை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை, பணியில் தூய்மை மட்டுமே தேவை. நமது பணி தூய்மையானது என்றால், நாம் இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை" என்று தெரிவித்தார்.


Next Story