டெல்லியில் உயிரிழந்த இளம்பெண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - டெல்லி முதல்-மந்திரி உத்தரவு


டெல்லியில் உயிரிழந்த இளம்பெண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - டெல்லி முதல்-மந்திரி உத்தரவு
x

டெல்லியில் காரில் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் கஞ்சவாலா பகுதியில் உயிரிழந்த இளம்பெண் அஞ்சலியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

"உயிரிழந்த இளம்பெண்ணின் தாயிடம் பேசினேன். உங்கள் மகளுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். இந்த வழக்கை எதிர்த்து போராட சிறந்த வழக்கறிஞரை டெல்லி அரசு நியமிக்கும். உயிரிழந்த இளம்பெண் அஞ்சலியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவரது தாயார் நோய்வாய்ப்பட்டுள்ளார். அவருக்கு முழு சிகிச்சை அளிக்கப்படும். இளம் பெண்ணின் குடும்பத்திற்கு எதிர்காலத்தில் ஏதேனும் தேவை ஏற்பட்டால், நாங்கள் அவற்றை நிறைவேற்றுவோம்" என்று கூறியுள்ளார்.

வழக்கின் முழுவிவரம்:-

டெல்லியின் சுல்தான்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சலி (வயது 20). இவர் சுல்தான்புரியில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் (Event Management Firm) வேலை செய்து வருகிறார். இதனிடையே, புத்தாண்டையொட்டி அஞ்சலி பணிபுரியும் நிறுவனம் சார்பில் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கான பணியை முடித்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன்தின நாளான டிசம்பர் 31-ம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர், ஜனவரி 1 புத்தாண்டு பிறந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்துள்ளார். பின்னர், ஓட்டலில் இருந்து புத்தாண்டு அதிகாலை 1.45 மணியளவில் ஸ்கூட்டரில் அஞ்சலி புறப்பட்டுள்ளார். ஓட்டலில் இருந்து ஸ்கூட்டரில் அஞ்சலி புறப்பட்ட நிலையில் சாலையில் வேகமாக வந்த கார் அஞ்சலி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், அஞ்சலி காரின் அடியில் சிக்கிக்கொண்டார்.

இளம்பெண் காரின் அடியில் சிக்கிக்கொண்டதை அறியாமல் கார் டிரைவர் காரை வேகமாக இயக்கியுள்ளார். காருக்கு அடியில் சிக்கிய கதறிய அஞ்சலி நிலையிலும் அந்த கார் வேகமாக சென்றுள்ளது. காரில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது குடித்துவிட்டு காரை ஓட்டியுள்ளனர்.

காருக்கு அடியில் இளம்பெண் அஞ்சலி சிக்கிய நிலையில் அவரை சுமார் 13 கிலோமீட்டர் இழுத்து சென்றுள்ளனர். இறுதியாக கஞ்சாவாலா பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் காருக்கு அடியில் ஏதோ சிக்கி இருப்பதை உணர்ந்த டிரைவர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது தான் காருக்கு அடியில் இளம்பெண் சிக்கியது தெரியவந்தது. கார் மோதியதில் படுகாயமடைந்த அஞ்சலி காருக்கு அடியில் சிக்கி 13 கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில் உடலில் படுகாயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் உடல் காருக்கு சிக்கியதை கூட அறியாமல் மது போதையில் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளனர். காருக்கு அடியில் சிக்கி பல கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டதில் அஞ்சலி அணிந்திருந்த ஆடைகள் கிழிந்து அவர் நிர்வாண நிலைக்கு சென்றுள்ளார். மேலும், அவரின் முதுகு, பின்பகுதியில் கடுமையான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அஞ்சலியின் கை,கால்கள் மிகவும் கொடூரமான நிலையில் இருந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக மதுபோதையில் காரை ஓட்டி இளம்பெண் உயிரிழப்பு ஏற்படத்திவிட்டு உடலை பல கிலோமீட்டர் தூரம் காரில் இழுத்து சென்று தப்பியோடிய தீபக் கண்ணா (வயது 26), அமித் கண்ணா (வயது 25), கிருஷ்ணா (வயது 27), மிதுன் (வயது 26), மனோஜ் மிட்டல் (வயது 27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த அஞ்சலியில் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் டெல்லியை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.

மிகவும் கொடூரமாக உயிரிழந்து நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சலியில் தாயார் உள்பட குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். இதனால், இந்த விவகாரம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த அஞ்சலியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு இன்று வெளியாகியுள்ளது.

இதில், அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது. விபத்து மற்றும் காருக்கு அடியில் சிக்கி பல கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டதாலேயே இளம்பெண் உயிரிழந்துள்ளதாகவும், இளம்பெண்ணின் அந்தரங்க பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்தவித காயங்களும், தடயங்களும் இல்லை என்றும் பிரேதபரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story