பெங்களூருவில் முதன் முறையாக கம்பளா போட்டி
பெங்களூருவில் முதன் முறையாக வருகிற 24-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் கம்பளா போட்டி நடக்கிறது. தொடக்க விழாவில் சித்தராமையா, நடிகை அனுஷ்கா பங்கேற்கிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் நடைபெறும் பாரம்பரிய போட்டி, கம்பளா. கம்பளா என்பது, 2 எருமை காளைகளை ஒரு கலப்பையில் கட்டி சேறு சகதியான வயலில் ஓடவிடப்படும். இதில் கலப்பையில் கட்டப்பட்டுள்ள கயிறை பிடித்துக்கொண்டு ஒரு வீரர் காளைகளை இலக்கை நோக்கி ஓட்டிச் செல்வார். இவ்வாறு இலக்கை எந்த ஜோடி எருது குறைந்த நேரத்தில் கடக்கிறதோ அந்த காளைகளுக்கும், அந்த வீரருக்கு பரிசு வழங்கப்படும்.
கடலோர மாவட்டங்களில் மட்டும் ஆண்டுதோறும் பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டு வந்த கம்பளா போட்டி கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் விரைவில் நடக்க உள்ளது. அதாவது கடலோர மாவட்டங்களில் செயல்படும் துளு அமைப்பின் 50-வது ஆண்டு பொன் விழாவையொட்டி மவருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பெங்களூரு அரண்மனை மைதானத்தில் முதன்முறையாக கம்பளா போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தொடங்கிவைக்க உள்ளனர். மேலும் பெங்களூருவில் கம்பளா போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பிரபல நடிகை அனுஷ்காவை தொடக்க விழாவில் பங்கேற்க வைக்க ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. நடிகை அனுஷ்காவின் சொந்த ஊர் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு என்பது குறிப்பிடத்தக்கது.