கமல்நாத் பா.ஜ.க.வில் இணைகிறாரா? மத்திய பிரதேச காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், மகன் நகுல்நாத் எம்.பியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும் அறியப்படும் கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை சீட்டை எதிர்பார்த்து இருந்த கமல்நாத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் கமல்நாத் இருந்து வருகிறார்.
அதேபோல், எம்.பியாக இருக்கும் கமல்நாத்தின் மகன் நகுல் நாத், விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில், தானே போட்டியிட இருப்பதாக அறிவித்தார். கட்சி மேலிட அறிவிப்புக்கு காத்திராமல் தன்னிச்சையாக அறிவித்தார்.
இந்த நிலையில், நகுல் நாத் இன்று தனது எக்ஸ் தளத்தில் உள்ள பயோவில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்ற விவரத்தை நீக்கியுள்ளார். இதனால், கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் பா.ஜ.க.வில் இணைய போவதாக யூகங்கள் அதிகரிக்க தொடங்கின.
இந்த நிலையில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், கமல்நாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகருமான நரேந்திர சலுஜா, போபாலில் உள்ள முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு "ஜெய் ஸ்ரீராம்" என்று தலைப்பிட்டுள்ளார். இந்த யூகங்களுக்கு மத்தியில் கமல்நாத், டெல்லியில் முகாமிட்டுள்ளார்.