மேற்கு வங்காளத்தில் காட்டாட்சி நடக்கிறது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு


மேற்கு வங்காளத்தில் காட்டாட்சி நடக்கிறது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் ANI

பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகரிக இந்தியாவின் முகத்தில் ஒரு கறையாக உள்ளது என்று மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

போபால்,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் (முதுநிலை மருத்துவ மாணவி) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள அரசை மத்திய மந்திரியும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகரிக இந்தியாவின் முகத்தில் ஒரு கறையாக உள்ளது. இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததற்காகவும், இதை கண்டித்து போராடியவர்கள் தாக்கப்பட்டதற்காகவும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெட்கப்பட வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் காட்டாட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி இரக்கமற்றவராக மாறியிருக்கிறார். இந்த நிலைமை மாற வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story