ஜூலை 27-ந்தேதியை சர்வதேச துரோகிகள் தினம் என ஐ.நா. அறிவிக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. வினோத கோரிக்கை
ஜூலை 27-ந்தேதியை சர்வதேச துரோகிகள் தினம் என ஐ.நா. அறிவிக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.
புனே,
மராட்டியத்தில் ஆளுங்கட்சியாக இருந்த, சிவ சேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனியாக பிரிந்தது. இதனை தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான மற்றொரு அணி என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சியமைத்தது. ஷிண்டே முதல்-மந்திரியாகி உள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகி உள்ளார்.
இந்நிலையில், மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நித்தேஷ் ராணே இன்று கூறும்போது, ஜூலை 27-ந்தேதி உத்தவ் தாக்கரே தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவரை விட பெரிய துரோகி கிடையாது. தனது தந்தையின் கருத்துகளுக்கு துரோகம் செய்த ஒரு துரோகி அவர். இந்துத்துவாவுக்கு, மராத்திகளுக்கு, தேவேந்திர பட்னாவிசுக்கு மற்றும் பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்தவர் அவர்.
அதனாலேயே, ஜூலை 27-ந்தேதியை சர்வதேச துரோகிகள் தினம் என அறிவிக்க வேண்டும். எனது கோரிக்கையை ஐ.நா. அமைப்பு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளும் என நம்புகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.