மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் குறித்து நீதி விசாரணை-சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேட்டி


மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் குறித்து நீதி விசாரணை-சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேட்டி
x

கர்நாடகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதல் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

உபகரணங்கள் கொள்முதல்

சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பெங்களூரு ஜெயநகர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கா்நாடகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு சந்தை விலையை விட 10 மடங்கு கூடுதல் விலை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பொது கணக்கு தணிக்கைத்துறையும் அறிக்கை வழங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.

விசாரணைக்கு உத்தரவு

அதனால் இந்த சுகாதாரத்துறை முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்துமாறு கோரி முதல்-மந்திரிக்கு பரிந்துரை செய்துள்ளோம். அனாதை உடல்கள், சாலையோரம் இறப்பவர்களின் உடல் திருடப்பட்டு உடல் உறுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இது தீவிரமான விஷயம். இதுகுறித்து தேவையான தகவல்கள் திரட்டப்படும். அதன் பிறகு இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

ஆரோக்கிய கவச திட்டத்தை சீரமைக்க ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு இந்த வாரத்திற்குள் அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். நாங்கள் புதிதாக 170 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்துள்ளோம். அரசு ஆஸ்பத்திரிகளில் சி, டி பிரிவு ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறை சரிசெய்யப்படும்.

சுகாதார சேவைகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை இல்லை. ஆனால் அரசின் சேவைகள் பாதிக்கப்படக்கூடாது. அரசு டாக்டர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. சுகாதார சேவைகளில் தமிழ்நாடு, கேரளாவை விட கர்நாடகம் பின்தங்கி இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இதை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.


Next Story