சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது வருகிற 2-ந் தேதி தீர்ப்பு; டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது வருகிற 2-ந் தேதி தீர்ப்பு; டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
x

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீது வருகிற 2-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறி, பெங்களூரு, டெல்லியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தார்கள். இந்த சோதனையின் போது கிடைத்த தகவல்களை அமலாக்கத்துறைக்கு, வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்தனர். அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாக கூறி, கடந்த 2019-ம் ஆண்டு செம்டம்பர் 3-ந் தேதி, அவரை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்திருந்தனர்.

58 நாட்கள் சிறைவாசம் அனுபவித்திருந்த டி.கே.சிவக்குமார், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த வழக்கில் டி.கே.சிவக்குமாா் மீது டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள். கடந்த விசாரணையின் போது டி.கே.சிவக்குமார் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரும் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்கள்.

வருகிற 2-ந்தேதி தீர்ப்பு

அப்போது டி.கே.சிவக்குமார் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 30-ந் தேதி (அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, டி.கே.சிவக்குமாா் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது டி.கே.சிவக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி கூறப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் வருகிற 2-ந்தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி.கே.சிவக்குமார் ஆஜர்

இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார்.


Next Story