ஜார்க்கண்ட்: சம்பாய் சோரன் பதவி விலகலை தொடர்ந்து மந்திரியாக பதவியேற்ற ராம்தாஸ் சோரன்


ஜார்க்கண்ட்: சம்பாய் சோரன் பதவி விலகலை தொடர்ந்து மந்திரியாக பதவியேற்ற ராம்தாஸ் சோரன்
x

Image Courtesy : PTI

சம்பாய் சோரன் பதவி விலகியதை தொடர்ந்து, ராம்தாஸ் சோரன் எம்.எல்.ஏ. இன்று மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான அவர், சுமார் 5 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்தார்.

இதனிடையே ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்திருப்பதாக சம்பாய் சோரன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். அதோடு தனது எம்.எல்.ஏ. மற்றும் மந்திரி பதவிகளை அவர் ராஜினாமா செய்தார்.

சம்பாய் சோரன் பதவி விலகியதை தொடர்ந்து, கட்சிலா தொகுதி எம்.எல்.ஏ. ராம்தாஸ் சோரன் இன்று மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முன்னிலையில், ராம்தாஸ் சோரனுக்கு மாநில கவர்னர் சந்தோஷ் குமார் கங்வார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story