ஜார்க்கண்ட்: கைது செய்யப்பட்டால்...!! புது திட்டம் வகுத்த ஹேமந்த் சோரன்


ஜார்க்கண்ட்:  கைது செய்யப்பட்டால்...!! புது திட்டம் வகுத்த ஹேமந்த் சோரன்
x

Courtesy: NDTV    

சோரன் கைது செய்யப்பட்டால், அவருடைய மனைவி கல்பனா சோரன் முதல்-மந்திரியாக பதவியேற்கலாம் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

ராஞ்சி,

ஜார்க்கண்டில் ரூ.600 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20-ந்தேதி ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் ஹேமந்த் சோரன் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. எனினும், இக்கடிதத்துக்கு சோரன் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன்பின்னர், டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த 29-ந்தேதி மீண்டும் சோதனை செய்தனர். வீட்டில் ஹேமந்த் சோரன் இல்லை. எனினும், இந்த சோதனையில், அவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம், அவரின் 2 பி.எம்.டபிள்யூ. காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க துறை இன்று விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக விசாரணை முகமையின் முன் அவர் இன்று ஆஜராக உள்ளார். சோரனிடம் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்ற பின்னர், அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

இந்த சூழலில், அவர் கைது செய்யப்பட்டால், அடுத்த முதல்-மந்திரியாக சோரனின் மனைவி கல்பனா சோரன் பதவியேற்கலாம் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த கூட்டத்தில் சோரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இந்த சூழலில், அரசை பாதுகாப்பதே முக்கியம் என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் அதற்கு ஒப்பு கொண்டனர். இதன்படி, காங்கிரசை சேர்ந்த மாநில சுகாதார மந்திரியான பன்னா குப்தா கூறும்போது, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான நாங்கள் அனைவரும் முதல்-மந்திரிக்கு முழு அளவில் ஆதரவளிக்கிறோம் என கூறியுள்ளார்.

எனினும், சோரனின் மனைவி பதவியேற்பதற்கு சட்டப்பூர்வ தடங்கல்கள் காணப்படுகின்றன. வருகிற நவம்பரில் ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழலில், கல்பனா எம்.எல்.ஏ. ஆவது கடினம் என கூறப்படுகிறது.


Next Story