டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்


Jharkhand CM Hemant Soren met PM Narendra Modi
x

ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியுடனான முதல் சந்திப்பு இதுவாகும்.

புதுடெல்லி,

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தநிலையில், அவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த மாதம் 28-ம்தேதி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் மீண்டும் அம்மாநில முதல்-மந்திரியாக பதிவியேற்றார்.

இந்நிலையில், முதல்-மந்திரியாக பதிவியேற்ற பிறகு டெல்லி சென்றுள்ள ஹேமந்த் சோரன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, ஜார்க்கண்ட் மாநில பிரச்சினைகள் குறித்தும் மத்திய நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை முதல் முறையாக ஹேமந்த் சோரன் சந்தித்துள்ளார்.

முன்னதாக, நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் ஹேமந்த் சோரனும் அவரது மனைவியும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story