காஷ்மீர்: புல்வாமா தாக்குதல் பயங்கரவாதியின் வீடு புல்டோசர் கொண்டு இடிப்பு - அதிகாரிகள் அதிரடி
புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை தலைமையாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர்.
புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அஷிக்யு நிங்ரோவும் உள்ளடக்கம். புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோ தற்போது பாகிஸ்தானில் உள்ளான். அஷிக்யு நிங்ரோவை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோவுக்கு சொந்தமாக புல்வாமா மாவட்டம் ராஜ்புரா நியூகாலணியின் 2 அடுக்குமாடி வீடு உள்ளது.
இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி அஷ்க்யு நிங்ரோவின் வீட்டை அதிகாரிகள் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர்.
பயங்கரவாத செயல்களால் திரட்டப்பட்ட பணத்தை கொண்டு, அரசு நிலத்தை ஆக்கிரமித்து இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அரசு நிலத்தை மீட்டனர்.
ஜெய்ஷ் இ முகமது அஷிக்யு நிங்ரோவின் வீட்டை இடிக்க காஷ்மீரில் செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.