காங்கிரசில் அடுத்தடுத்து திருப்பம்... பதவியில் இருந்து தேசிய செய்தி தொடர்பாளர் ராஜினாமா


காங்கிரசில் அடுத்தடுத்து திருப்பம்... பதவியில் இருந்து தேசிய செய்தி தொடர்பாளர் ராஜினாமா
x

காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து ஜெய்வீர் ஷெர்கில் இன்று ராஜினாமா செய்துள்ளார்.



புதுடெல்லி,



காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்த ஜெய்வீர் ஷெர்கில் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி அவர், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில், இந்திய தேசிய காங்கிரசில் தற்போது முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்களின் கொள்கை மற்றும் பார்வையானது, இளைஞர்கள் மற்றும் நவீன இந்தியாவின் நோக்கங்களுடன் நீண்ட நாட்களாக ஒத்து போகாத தன்மையுடன் காணப்படுகிறது.

இதுதவிர, நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக முடிவு எடுப்பது இல்லை என்பதும் எனக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது. சுய நலன்களில் ஆர்வமுள்ள தனிநபர்கள் செல்வாக்கோடு இருப்பதுடன், முகஸ்துதி பாடுவதும், அடிப்படை உண்மை தன்மையை தொடர்ச்சியாக தவிர்ப்பவர்களாகவும் உள்ளனர்.

இதனை ஒழுக்கநெறி சார்ந்து என்னால் ஏற்கவோ அல்லது தொடர்ச்சியாக பணியாற்றவோ முடியாது என அவர் தெரிவித்து உள்ளார். சமீப நாட்களாக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து காங்கிரசின் தலைவர்கள் பலர் விலகி வருகின்றனர்.

மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் சமீபத்தில் தங்களது பணி நியமனங்களில் இருந்து விலகியது கட்சியில் சலசலப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் பதவியில் இருந்து விலகியுள்ளார்.


Next Story