ஒக்கலிகர் வாக்கு போய்விடும் என்ற பயத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தவறான பிரசாரம்; பா.ஜனதா குற்றச்சாட்டு
ஒக்கலிகர் வாக்கு போய்விடும் என்ற பயத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தவறான பிரசாரம் செய்வதாக பா.ஜனதா குற்றச்சாட்டு கூறி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக பா.ஜனதா கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாடப்பிரபு கெம்பேகவுடா சிலை திறப்பு விஷயத்தில் ஜனதா தளம் (எஸ்) அரசியல் செய்வது வெட்கக்கேடானது. கெம்பேகவுடா, தேவேகவுடா மீது உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் யாரும் இதை வைத்து அரசியல் செய்ய மாட்டார்கள். ஒக்கலிகர்களின் வாக்குகள் எங்கு போய்விடுமோ என்று அஞ்சி அக்கட்சி பா.ஜனதா அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறது.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேவேகவுடாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொலைபேசியிலும் அவர் பேசி அழைப்பு விடுத்துள்ளார். 20 நாட்களுக்கு முன்பே தேவேகவுடாவை மந்திரி அஸ்வத் நாராயண் நேரில் சென்று அழைத்தார். அழைப்பிதழிலும் தேவேகவுடா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் தனது செல்வாக்கு போய்விடுமோ என்று அஞ்சி குமாரசாமி அரசியல் செய்கிறாரா?.தேவேகவுடா போன்ற மூத்த தலைவரை அரசியலுக்கு பயன்படுத்துவது ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வெட்கக்கேடான செயல் ஆகும்.
பா.ஜனதாவில் ஒக்கலிகர் தலைவர்கள் முன்னிலைக்கு வருவதை குமாரசாமியால் சகித்துக்கொள்ள முடியவில்லையா?.
இவ்வாறு அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.