ஜம்மு காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!
ஜம்மு காஷ்மீரில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக உள்ளூர்வாசிகளாக அல்லாதவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய அனுமதிக்க வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில், ``ஜம்மு காஷ்மீரை சேராத மற்ற மாநில மக்கள் உள்பட மொத்தம் 25 லட்சம் பேரை புதிய வாக்காளர்களாகச் சேர்க்கவிருப்பதாகவும், வெளியாட்கள் வாக்காளர்களாகப் பெயர் சேர்ப்பதற்கு இருப்பிடம் தேவையில்லை, அவர்கள் தொழிளாலர்களாகவோ, அல்லது மாணவர்களாகவோ இருக்கலாம் என்று ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் புதிதாக 25 லட்சம் பேர் சேர்க்கப்படுவர் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.இதற்கு, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து விவாதிக்க தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியுமான டாக்டர் பரூக் அப்துல்லா இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா கூறியதாவது:-
நாங்கள் அனைத்துக் கட்சிகளும் இந்தப் புதிய சட்டத்திற்கு (ஜம்மு காஷ்மீரில் உள்ள வெளி மாநிலத்தவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை) எதிராக இருக்கிறோம்.
நாங்கள் அதை எதிர்க்கிறோம். இது தொடர்பாக கோர்ட்டை நாடுவது குறித்தும் யோசித்து வருகிறோம்.
வரும் செப்டம்பரில் ஜம்மு - காஷ்மீருக்கு அனைத்து தேசிய கட்சிகளின் தலைவர்களையும் அழைப்போம். அப்போது எங்கள் பிரச்சினைகளை அவர்கள் முன் வைப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.