சிறைகளில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் சிறைத்துறை அதிகாரிகளே முழு பொறுப்பு; மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
சிறைகளில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் சிறைத்துறை அதிகாரிகளே முழு பொறுப்பு என்று மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் சமீபத்தில் சிறைத்துறை வளர்ச்சி ஆணையத்தை அரசு அமைத்திருந்தது. இந்த ஆணையத்தில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன், பெங்களூரு விகாச சவுதாவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா, பெலகாகி ஹிண்டல்கா உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன், மந்திரி அரக ஞானேந்திரா ஆலோசனை நடத்தினார்.
அதே நேரத்தில் சிறைகளில் நடைபெறும் முறைகேடுகள், குற்றங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது, பிறந்தநாள் கொண்டாடுவது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் எந்த விதமான சட்டவிரோத செயல்களும் நடைபெறக்கூடாது, அதனை தடுக்க சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாாிகளுக்கு, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால், அதற்கு சிறைத்துறை அதிகாரிகளே முழு பொறுப்பு, சிறைத்துறை அதிகாரிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி அரக ஞானேந்திரா எச்சரித்துள்ளார்.