'இந்திய அரசு குறித்து ஜேக் டார்சி தெரிவித்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது' - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்


இந்திய அரசு குறித்து ஜேக் டார்சி தெரிவித்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது -  மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
x

ஜேக் டார்சி தனது மோசமான செயல்களை மறைக்க முயற்சிக்கிறார் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என இந்திய அரசு தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. ஜேக் டார்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஜாக் டோர்சி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை சுற்றியும், அப்போது அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சுற்றியும் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தன.

விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் எனவும், டுவிட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்றெல்லாம் கூட மிரட்டல்கள் வந்தன. இந்தியாவில் டுவிட்டரை கட்டுப்படுத்துவோம் என்று சொல்லப்பட்டது. ஆம், இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் தான்" என்று ஜேக் டார்சி கூறினார்.

இந்நிலையில் ஜேக் டார்சியின் குற்றச்சாட்டை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜேக் டோர்ஸி கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது. அவர் தனது மோசமான செயல்களை இதன் மூலம் மறைக்க முயற்சிக்கிறார்" என்று தெரிவித்தார்.


Next Story