பா.ஜனதாவின் 'பி-டீம்' என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா


பா.ஜனதாவின் பி-டீம் என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா
x
தினத்தந்தி 10 Sept 2023 4:00 AM IST (Updated: 10 Sept 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

மதவாத கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மதவாத கட்சியுடன் கூட்டணி

மதசார்பற்ற கட்சி என்று ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் கூறி வருகின்றனர். தற்போது அந்த கட்சியினர் மதவாத கட்சியான பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நான் ஏற்கனவே ஜனதாதளம் (எஸ்) கட்சியை பா.ஜனதாவின் 'பி-டீம்' என்று கூறி வந்தேன். தற்போது மதவாத கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் ஜனதாதளம் (எஸ்) கட்சி பா.ஜனதாவின் 'பி-டீம்' என்பதை நிரூபித்துள்ளது.

ஜி.டி.தேவேகவுடா கூட நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று கூறி இருக்கிறார். அதிகாரத்திற்காக ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

மின் பற்றாக்குறை

மாநிலத்தில் ஆகஸ்டு மாதம் சரியாக மழை பெய்யவில்லை. மழை குறைவு காரணமாக விவசாயத்திற்காக மின் மோட்டார்களை அதிகமாக விவசாயிகள் பயன்படுத்துவதால் மாநிலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்து இருப்பதால், வெளியில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. என்றாலும், விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மின்சாரம் வழங்கப்படும்.

மகதாயி நதியின் குறுக்கே கலசா-பண்டூரியில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசும், மத்திய சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறையும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு அனுமதி வழங்கினால் அணைகட்டும் திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தயாராக உள்ளது. ஹலால், ஹிஜாப் விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடைபெற்று வருவதால் அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

நேரம் ஒதுக்கவில்லை

காவிரி, மகதாயி, கிருஷ்ணா உள்ளிட்ட தேசிய அளவிலான நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பிரதமரை சந்தித்து முறையிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நேரம் ஒதுக்குமாறு கூறி 3 வாரங்களுக்கு முன்பாகவே கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ஆனாலும் பிரதமரை சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை.

மாநிலத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வறட்சி பாதித்த தாலுகாக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்டவை நிரந்தரமாக வழங்கப்பட்டு வருகிறது. வறட்சி குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவை அனுப்பும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியும் இன்னும் பதில் பரவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story