பெங்களூரு விமான நிலையத்தில் விசா உள்பட ஆவணங்களை சரிபார்க்க பல மணி நேரம் ஆகிறது


பெங்களூரு விமான நிலையத்தில் விசா உள்பட ஆவணங்களை சரிபார்க்க பல மணி நேரம் ஆகிறது
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விசா உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க பெங்களூரு விமான நிலையத்தில் பல மணி நேரம் ஆவதால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

காத்து இருக்கும் பயணிகள்

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. கொரோனா காலத்தில் கூட இந்த விமான நிலையம் அதிக பயணிகளை கையாண்டு சாதனை படைத்தது. இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் பட்டியலில் பெங்களூரு விமான நிலையமும் இடம்பிடித்து உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் மீது பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை அதிகாரிகளிடம் விசா உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்புக்காக கொடுக்க வேண்டும்.

இந்த ஆவணங்களை சரிபார்க்க குடியுரிமை துறை அதிகாரிகள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். இதனால் ஆவணங்கள் சரிபார்ப்புக்காக பயணிகள் பல மணி நேரம் காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

பிரச்சினை தீர்க்கப்படும்

இதுகுறித்து பிரசாந்த் தயாள் என்ற விமான பயணி தனது டுவிட்டர் பக்கத்தில், "பெங்களூரு விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரிகளின் பணி மிகவும் மோசமாக உள்ளது. பயணிகளை பராமரிக்க முடியாவிட்டால் ஏன் இத்தனை விமானங்களை கையாளுகின்றனர்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதுபோல் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில், "விமான பயணிகளின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். பண்டிகை காலம் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. பெங்களூரு விமான நிலையம் சிறந்த நிர்வாகத்தில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்" என்று கூறியுள்ளது.


Next Story