'இந்தியா' கூட்டணியால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக கூறுவது தவறு- மந்திரி தினேஷ் குண்டுராவ் சொல்கிறார்
‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்று இருப்பதன் காரணமாக தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதாக கூறுவது தவறு என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறினார்.
கொள்ளேகால்:-
மந்திரி தினேஷ் குண்டுராவ்
கர்நாடக சுகாதார துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வந்தார். அவர் சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்காக ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அவர்கள் இருவரும் கூட்டணி அமைத்துக் கொண்டதால் காங்கிரசுக்கு எந்தவித பயமும் இல்லை. கடந்த முறை ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் நாங்கள்(காங்கிரசார்) பல தொந்தரவுகளை அனுபவித்தோம்.
நல்லது நடக்கும்
அதனால் இந்த முறை எந்தவித கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. தாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்த ஜனதா தளம்(எஸ்) கட்சி இப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து கொண்டது ஏன்?. ஆனால் இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டது நல்லதோ?, கெட்டதோ? அதை அவர்களே அனுபவிப்பார்கள். அவர்கள் கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு பல கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
கூட்டணி இல்லாமல் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். இதன்மூலம் காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை தேர்தலில் எங்களுக்கு நல்லது நடக்கும்.
இந்தியா கூட்டணி
பழைய மைசூரு பகுதியில் வாழும் மக்களும், விவசாயிகளும் காவிரி நீர் இல்லாமல் மிகுந்த கஷ்டப்படுகிறார்கள். இந்த ஆண்டு மழை பொய்த்துவிட்டது. மழை இல்லாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும். உயிர் வாழ்வதற்கு நீர் கண்டிப்பாக வேண்டும். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புவோம். 'இந்தியா' கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்று இருப்பதன் காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக கூறுவது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.