மாநகராட்சி அலுவலகத்தில் தீ விபத்திற்கு போலீசார் நோட்டீஸ் அளித்திருப்பது சரியல்ல


மாநகராட்சி அலுவலகத்தில் தீ விபத்திற்கு போலீசார் நோட்டீஸ் அளித்திருப்பது சரியல்ல
x

பெங்களூரு மாநகராட்சி அலுவலக தீ விபத்து குறித்து விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் அளித்திருப்பது சரியல்ல என்று தலைமை என்ஜினீயர் பிரகலாத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

பெங்களூரு:-

தலைமை என்ஜினீயருக்கு நோட்டீஸ்

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆய்வக அறையில் நடந்த தீ விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்து விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து மாநகராட்சி என்ஜினீயர்கள் உள்பட 3 பேர் மீது அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மாநகராட்சி தலைமை என்ஜினீயரான பிரகலாத்திற்கு அல்சூர்கேட் போலீசார் விசாரணைக்கு ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று தலைமை என்ஜினீயர் பிரகலாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

சரியானது இல்லை

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த தீ விபத்து குறித்து நானே அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். தற்போது எனக்கே விசாரணைக்காக போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருப்பது சரியானது இல்லை. அந்த நோட்டீஸ் எனது வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ வரவில்லை. போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருப்பது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன். தீ விபத்து சம்பவம் குறித்து மாநகராட்சி சார்பில் எனது தலைமையில் தான் விசாரணை நடக்கிறது.

மற்றொரு புறம் நான் கொடுத்த புகாரின் பேரில் அல்சூர்கேட் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். தற்போது தீ விபத்து நடந்த அலுவலக அறையின் சாவி போலீசாரிடம் இருப்பதால், அந்த இடத்தை பார்வையிட்டு என்னால் விசாரணை நடத்த முடியவில்லை. போலீசார் சாவி வழங்கியதும், விசாரணையை தொடருவேன். தீ விபத்திற்கு மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியம், ரசாயன வெடிப்பு உள்ளிட்ட எலலா கோணத்திலும் விசாரணை நடக்கிறது. விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் 9 பேரையும் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் அறிக்கும் அறிக்கைக்கு பின்பு முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story