இது ஒரு அரசியல் பட்ஜெட்


இது ஒரு அரசியல் பட்ஜெட்
x
தினத்தந்தி 8 July 2023 2:15 AM IST (Updated: 8 July 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:-

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை:-

'கா்நாடக அரசின் நிதிநிலை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட்டில் எதுவும் கூறவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதாக கூறியுள்ளார். முதல்-மந்திரி சித்தராமையா அந்த காலத்தில் இருப்பது தெரிகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றபடி பட்ஜெட் இல்லை. இது ஒரு அரசியல் பட்ஜெட். இது பொய் பேசும் அரசு என்பதற்கு கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் எடுத்துக்காட்டு. முதல்-மந்திரி சித்தராமையா இந்த பட்ஜெட்டில் முந்தைய பா.ஜனதா அரசை விமர்சிக்க அதிக இடம் அளித்துள்ளார். உத்தரவாத திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.52 ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். ஆனால் தற்போது பாதி ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி தான் செலவாகும். உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதால் சாமானிய மக்கள் மீது இந்த அரசு சுமையை ஏற்றியுள்ளது.

தற்போது பொது கடன் அளவை ரூ.85 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளனர். நாங்கள் உபரி பட்ஜெட் தாக்கல் செய்தோம். ஆனால் இவர்கள் வருவாய் பற்றாக்குறை பட்ஜெட்டை கொடுத்துள்ளனர். புதிய நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. உழைக்கும் வர்க்கம், தலித் மக்களுக்கு எந்த திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டிலும் விரோத அரசியலை காங்கிரஸ் அரசு வெளிப்படுத்தியுள்ளது'.

பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல்:-

'கர்நாடக அரசின் உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த ரூ.57 ஆயிரத்து 910 கோடி செலவாகும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாய் வசூல் பற்றி தெளிவாக எதுவும் கூறவில்லை. வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை பற்றி அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பட்ஜெட்டில் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை. பட்ஜெட் அனைத்து மக்களையும் திருப்தி படுத்தும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையின மக்களை திருப்திப்படுத்தும் வகையில் முதல்-மந்திரி சித்தராமையா திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட் பெரும்பான்மையின மக்களை புறக்கணித்துள்ளது. பத்திரப்பதிவு கட்டணம், முத்திரைத்தாள் வரி, வாகன வரி அதிகரிப்பு ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும்'.

சட்டசபை ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி:-

'இதை கா்நாடக அரசின் பட்ஜெட் என்று

கூறுவதை விட பா.ஜனதாவை குறை சொல்லும் பட்ஜெட் என்று சொன்னால் மிகையாகாது. உழைக்கும் வர்க்கத்தினர் தன்னிறைவுடன் வாழ்வதற்கான சூழலை இந்த பட்ஜெட் ஏற்படுத்தாது. பட்ஜெட்டில் உத்தரவாத திட்டங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதை விட்டால் வேறு ஒன்றுமில்லை. மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை வழங்க இந்த அரசு தவறிவிட்டது. ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறார்கள். இதன் மூலம் மாநிலத்தை எங்கே அழைத்து செல்கிறார்கள்?. இந்த பட்ஜெட்டில் எந்த திட்டங்களும் இல்லை'.

கர்நாடக தொடக்க கல்வித்துறை மந்திரி மதுபங்கரப்பா:-

'கர்நாடகத்தில் சிறந்த கல்வி வழங்குவதற்காக தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக மாநில கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளோம். இதன்மூலம் மாணவ-மாணவிகளுக்கு சிறந்த கல்வி வழங்க முடியும். மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த 8 மாதங்கள் அவகாசம் உள்ளது. இந்த கல்வி கொள்கையை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மொழிகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கொள்கையில் மாநில பாடத்திட்டம், தேசிய பாடத்திட்டம் என்ற வேறுபாடு இருக்காது'.

ஜனதா தளம் (எஸ்) கட்சி மூத்த துணைத்தலைவர் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி.

'நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட், ஒரு போலி பட்ஜெட் ஆகும். எந்தவொரு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை கைப்பற்ற வேண்டி தந்திரமான அறிவிப்புகளை கொண்ட போலி பட்ஜெட் இதுவாகும். 5 இலவச திட்டங்களை செயல்படுத்த முடியாமல் காங்கிரஸ் அரசு திணறி வருவது மேல்நோட்டமாக தெரிகிறது. மகளிர், குழந்தைகள், உணவு, விவசாயம் இப்படி எந்தவொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ச்சியை நோக்கி இல்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். மேகதாது, மகதாயி, பத்ரா, எத்தினஒலே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மேல்நோட்டமாக கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த திட்டங்களுக்கு நிதி எப்படி வரும். அன்னபாக்ய திட்டத்திற்கு எப்படி அரிசி பெறப்படும் என்ற விளக்கமும் இல்லை. கர்நாடக கருவூலத்தை காலி செய்ய திட்டமிட்டுள்ள காங்கிரஸ், மக்களுக்காக செலவு செய்ய நிதியை எங்கிருந்து திரட்டும் என்ற சந்தேகம் எழுதுள்ளது'.

மேற்கண்டவாறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story