வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளை 17-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ


வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளை 17-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
x

இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன், நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு சேவைகளை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக 'இன்சாட்-3டிஎஸ்' என்ற வானிலை செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பெங்களூருவில் வடிவமைத்து இருந்தது.

இதனை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு தயார் நிலையில் இருந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ரக ராக்கெட்டில் கடந்த மாதம் 25-ந்தேதி விஞ்ஞானிகள் செயற்கைகோளை பொருத்தினர்.

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. 82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் சுமார் 35 ஆயிரத்து 786 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்படுகிறது. அங்கிருந்தபடியே வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர்புடைய வானிலை சேவைகளை அளிக்க உள்ளது.

இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன், நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளையும் வழங்குவதுடன், முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களை கொண்டுள்ளது.


Next Story