ஆதித்யா விண்ணில் சீறிப்பாய்ந்தது: 4 மாதப்பயணத்திற்கு பிறகு இலக்கை அடையும்


ஆதித்யா விண்ணில் சீறிப்பாய்ந்தது: 4 மாதப்பயணத்திற்கு பிறகு இலக்கை அடையும்
x
தினத்தந்தி 3 Sept 2023 6:13 AM IST (Updated: 3 Sept 2023 7:44 AM IST)
t-max-icont-min-icon

நிலவைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று விண்ணில் சீறிப்பாய்ந்தது. 4 மாதப் பயணத்திற்கு பிறகு இலக்கை அடையும். விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளின் சாதனை தொடர்கிறது.

ஸ்ரீஹரிகோட்டா,

விண்வெளித்துறையில் இந்தியா பல அரிய சாதனைகளை நிகழ்த்தி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ரஷியா உள்ளிட்ட நாடுகள் பெரும் பொருட்செலவில் விண்கலங்களை உருவாக்கி விண்ணில் ஏவி வரும் நிலையில், இந்தியா குறைந்த செலவில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது

'ஆதித்யா எல்-1' விண்கலம்

நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி எந்த நாடுகளும் ஆய்வு பணியை செய்யாத நிலையில், 'சந்திரயான்-3' விண்கலம் திட்டத்தின் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இமாலய சாதனையை படைத்துள்ளது.

நிலவில் தரை இறங்கிய ரோவர் நாள்தோறும் ஆய்வு செய்து அங்குள்ள கனிமங்களை கண்டறிந்து புகைப்படம் அனுப்பி வருகிறது. சந்திரனை ஆய்வு செய்வதில் வெற்றி வாகை சூடிய இஸ்ரோ தற்போது தனது பயணத்தை சூரியனை நோக்கி தொடர்ந்துள்ளது.

இதுவரை விண்வெளி சென்று சூரியனை இந்தியா ஆய்வு செய்ததில்லை. முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது.

கவுண்ட் டவுன்

இந்த விண்கலத்தை சுமந்து செல்வதற்காக 321 டன் எடையுடன் கூடிய 44.4 மீட்டர் உயரமுள்ள 'பி.எஸ்.எல்.வி. சி-57' என்ற ராக்கெட் உருவாக்கப்பட்டது. இதில் விண்கலத்தை பொருத்தி பல்வேறு கட்ட சோதனைகளை விஞ்ஞானிகள் செய்தனர்.

இதனை உருவாக்கும் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றியது கூடுதல் சிறப்பு. அனைத்து பணிகளும் சோதனைகளும் நிறைவு பெற்ற நிலையில், இந்த ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 2-ந்தேதி (நேற்று) ஏவுவதற்கு இஸ்ரோ முடிவு செய்தது. இதனையடுத்து 24 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று முன்தினம் காலை 11.50 மணிக்கு தொடங்கியது.

விண்ணில் சீறிப்பாய்ந்தது

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் செல்வதை நேரில் பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கூடி இருந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கைகளில் குடைகளை பிடித்தபடி அனைவரும் காத்திருந்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதி கட்டப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

24 மணி நேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு நேற்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் தொடர்ந்தது.

மத்திய மந்திரி பாராட்டு

விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு நேரில் வந்திருந்தார்.

விண்கலம் ஏவப்பட்டதும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மத்திய மந்திரி வாழ்த்து தெரிவித்தார்.

விண்ணில் ராக்கெட் ஏவப்பட்டதை இஸ்ரோ அலுவலகம், குடியிருப்புகளின் மாடிகள் மற்றும் பார்வையாளர்கள் மாடங்களில் அமர்ந்திருந்த பல்வேறு தரப்பினரும் தேசிய கொடியை அசைத்தபடி பார்வையிட்டு பரவசம் அடைந்தனர். வானம் நேற்று மேக மூட்டம் இல்லாமல் இருந்ததால் ராக்கெட்டின் முதல் நிலை முடிந்து 2-வது நிலை தொடர்ந்ததை பொதுமக்களால் காண முடிந்தது.

4 மாத காலத்திற்கு பிறகு...

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

'ஆதித்யா எல்-1' விண்கல பணியின் நோக்கம் சூரியனின் கொரோனா, குரோமோஸ்பியர் மற்றும் போட்டோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு உள்ளது. கூடுதலாக, இது சூரியனில் இருந்து வெளிப்படும் துகள் பாய்ச்சல் மற்றும் காந்தப்புல வலிமையின் மாறுபாட்டை ஆய்வு செய்யும்.

விண்கலம், சூரியனை ஆய்வு செய்வதற்கான லாக்ரேஞ்ச் புள்ளி இருக்கும் இடத்திற்கு 4 மாத பயணத்திற்கு பின்னரே (125 நாட்கள்) சென்று சேரும். அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும்.

ஆய்வு

'ஆதித்யா எல்-1' விண்கலம் மூலம், சூரியனை பற்றிய விரிவான ஆய்வுக்காக 7 வெவ்வேறு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 4 கருவிகள் சூரியனில் இருந்து வரும் ஒளியை கண்காணிக்கவும், மீதம் உள்ள 3 கருவிகள் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களின் அளவுகளை அளவிடும் பணியிலும் ஈடுபடும்.

குறிப்பாக இந்தியாவின் சூரியப் பணியின் முக்கிய நோக்கங்களில் சூரிய கொரோனாவின் இயற்பியல் மற்றும் அதன் வெப்பமூட்டும் வழிமுறை, சூரிய காற்றின் வேகம், சூரிய வளிமண்டலத்தின் இணைப்பு மற்றும் இயக்கவியல், சூரியக் காற்றின் வினியோகம் மற்றும் வெப்பநிலை அனிசோட்ரோபி மற்றும் கரோனல் மாஸ் தோற்றம் ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும்.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

பின்னர் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, மிஷன் டைரக்டர் பிஜூ உள்ளிட்டோர் பேசினர்.


Next Story