குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து உள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,
வெற்றிகரமாக பறந்தது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்துள்ள பிரமாண்டமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.3-எம்2), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒன்வெப் இந்தியா-1 நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைகோள்களை இந்த ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. அந்தவகையில் இந்த வகை ராக்கெட்டின் முதல் வணிக பயணம் இதுவாகும்.
இந்த நிகழ்ச்சிக்குப்பின், இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் ஆதரவு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதன் மூலம் நாங்கள் ஏற்கனவே தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இது ஒரு வரலாற்றுப் பணியாகும். எல்.வி.எம்.3 ராக்கெட்டை வார்த்தக சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது.
டிசம்பர் மாத கடைசியில் 2-வது எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளும் விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான்-3 திட்டம் அடுத்த ஆண்டு (2023) ஜூன் மாதம் தொடங்க தயாராக உள்ளது. இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. எனவே அடுத்த ஆண்டு செயல்படுத்த விரும்புகிறோம்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் ராக்கெட்டிலும், எல்.வி.எம். 3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்ய இருப்பதால், தற்போது ஏவப்பட்ட ராக்கெட்டை விட 4 மடங்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும். அடுத்த ஆண்டு ஒன்-வெப்புக்கு சொந்தமான மேலும் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். இதற்கு பிறகு மீண்டும் எல்.வி.எம்.3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.
தமிழக அரசு நிலம் வழங்கியது
இந்தியாவின் 2-வது ஏவுதளம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான இடத்தை தமிழக அரசு முழுமையாக வழங்கி உள்ளது. அதனடிப்படையில் இடம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து உள்ளது. தொடர்ந்து நிலத்தை சுற்றி பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.
அதேபோல் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்பு தயார் நிலையில் உள்ளது. 2 ஆண்டுகளில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் முழுமை பெறுவதற்கு முன்பாகவே ஒரு ராக்கெட்டை அங்கிருந்து விண்ணில் ஏவுவதற்கு ஆலோசித்து வருகிறோம்.
கிரெயோஜெனிக் என்ஜினில் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது கிரையோஜெனிக் எந்திரம் மேலும் சிறப்பாக செயல்பட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு சோமநாத் கூறினார்.
'இந்தியா பின்தங்கவில்லை'
ஒன்வெப் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுனில் மிட்டல் கூறும்போது, 'இது ஒரு வரலாற்று நாள். இந்திய விண்வெளித்துறை. விண்வெளியில் இந்தியாவுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது. தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் மேலும் 36 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் அனுப்ப உள்ளது. உலகம் விண்வெளியை நோக்கி நகர்கிறது. இந்தியா அதில் பின்தங்கவில்லை' என்று பாராட்டு தெரிவித்தார்.
உலகம் முழுவதும் செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்த ராக்கெட்டுகளுக்கு ஒரு பெரிய பற்றாக்குறை உள்ளதாக கூறிய சுனில் மிட்டல், இதற்காக பலர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.