சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 56 வருடம் சிறை - கேரள கோர்ட்டு தீர்ப்பு


சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 56 வருடம் சிறை - கேரள கோர்ட்டு தீர்ப்பு
x

கோப்புப்படம் 

சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 56 வருடம் சிறை தண்டனை விதித்து கேரள கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜப்பார் (வயது 60). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

இவரிடம் 11 வயது மாணவன் படித்து வந்தான். அப்போது கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை அப்துல் ஜப்பார் அந்த மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியே யாரிடமாவது சொன்னால், கொன்று விடுவேன் என அப்துல் ஜப்பார் மிரட்டியதால் அந்த சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்தான்.

இந்த நிலையில் அந்த சிறுவனின் தம்பியையும் அரபி பாடம் படிப்பதற்கு அப்துல் ஜப்பாரிடம் அனுப்பி வைக்க பெற்றோர் தீர்மானித்து உள்ளனர். அதற்கு மாணவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளான். உடனே என்ன காரணம் என்று விசாரித்துள்ளனர்.

அப்போது தான் ஆசிரியர் அப்துல் ஜப்பார் தன்னை கொடுமைப்படுத்தியதை பெற்றோரிடம் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போத்தன்கோடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து ஆசிரியர் அப்துல் ஜப்பாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போத்தன்கோடு விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, அப்துல் ஜப்பாருக்கு 56 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாலியல் கொடுமை செய்து வந்தவருக்கு எந்த கருணையும் காட்டவேண்டிய தேவை இல்லை என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story