இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்- மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு


இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்- மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Sept 2023 3:24 PM IST (Updated: 27 Sept 2023 3:30 PM IST)
t-max-icont-min-icon

இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம் என்றும், கோசாலைகளை பராமரிக்கும் இந்த நிறுவனம், அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு பலன்களை பெறுவதாகவும் மேனகா காந்தி கூறியுள்ளார்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மீது, விலங்குகள் நல ஆர்வலரும், பாஜக எம்பியுமான மேனகா காந்தி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வரும் மேனகா காந்தி, சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-

இஸ்கான் நாட்டின் மிகப்பெரிய மோசடி நிறுவனம். கோசாலைகளை பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பலன்களைப் பெறுகிறது.

நான் இஸ்கான் நிறுவனத்தின் ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் கோசாலைக்கு சென்றேன். அங்கு பால் கொடுக்காத பசுக்களையோ, கன்றுகளையோ காண முடியவில்லை. இதன் பொருள் என்னவென்றால், அவை அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன.

இஸ்கான் தனது அனைத்து மாடுகளையும் கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று வருகிறது. இதை அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் செய்வதில்லை. 'ஹரே கிருஷ்ண ஹரே ராம' என்று சாலைகளில் அவர்கள் பாடிக்கொண்டு செல்கிறார்கள். அப்போது தங்களின் வாழ்நாள் முழுவதும் பாலை நம்பியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் கசாப்புக் கடைக்காரர்களுக்கு கால்நடைகளை விற்ற அளவுக்கு யாரும் விற்றிருக்க மாட்டார்கள்.

இவ்வாறு மேனகா காந்தி கூறினார்.

இந்த குற்றச்சாட்டை இஸ்கான் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஸ்திர் கோவிந்த தாஸ் மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பசுக்களையும் காளைகளையும் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கிறோம். அவர்கள் கூறுவதுபோல் கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்கப்படவில்லை.

மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் நாடுகளில்கூட பசு பாதுகாப்பில் இஸ்கான் முன்னோடியாக உள்ளது. திருமதி மேனகா காந்தி நன்கு அறியப்பட்ட விலங்கு உரிமை ஆர்வலர் மற்றும் இஸ்கானின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே அவரது இந்த கருத்து ஆச்சரியம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

கிருஷ்ண பக்தியை பரப்பி வரும் இஸ்கான் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. இஸ்கான் வழிபாட்டு முறைகளை லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றுகின்றனர்.


Next Story