ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாதிகள் கைது; பாகிஸ்தான் ராணுவ ஆயுதங்கள் பறிமுதல்


ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாதிகள் கைது; பாகிஸ்தான் ராணுவ ஆயுதங்கள் பறிமுதல்
x

டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்த கூடிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மொகாலி,



பஞ்சாப் போலீசார் தங்களுக்கு கிடைத்த உளவு தகவல் அடிப்படையில் டெல்லியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். டெல்லி போலீசார் உதவியுடன் நடந்த இந்த சோதனையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பு ஒன்றை பஞ்சாப் போலீசார் கடந்த ஞாயிற்று கிழமை கண்டறிந்தனர்.

அந்த அமைப்புடன் தொடர்புடைய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கனடாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஆர்ஷ்தீப் சிங் என்ற ஆர்ஷ் தலா, ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் தாதா குர்ஜந்த் சிங் என்ற ஜந்தா ஆகியோருடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட 4 பயங்கரவாதிகளையும் 5 நாட்கள் விசாரணை காவலில் போலீசார் எடுத்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் முன்பு நடத்தப்பட்டது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள், பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்த கூடியவை என தெரிய வந்துள்ளது. அவற்றை இந்திய ராணுவம் கூட பயன்படுத்தவில்லை.

இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள், ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிக்க தயார் நிலையில் உள்ள 40 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அவர்கள் 4 பேரும் தீபக் சர்மா, சந்தீப் சிங், சன்னி டகார், விபின் ஜாக்கர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள விபின் ஜாக்கரின் வீட்டில் தங்கியுள்ளனர்.

சுதந்திர தினத்தன்று டெல்லி மற்றும் பஞ்சாப்பில் குற்ற செயல்களில் ஈடுபட ஆர்ஷ் தலா உத்தரவிட்டார் என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இவர்கள் மீது கடத்தல், கொலை, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.


Next Story