பா.ஜனதாவுடன் சேர உத்தவ் தாக்கரே திட்டமா? சரத்பவார் கட்சி நிர்வாகி பதில்
உத்தவ் தாக்கரே பா.ஜனதாவுடன் சேர மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி மராட்டியத்தில் 10 இடங்களில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி உள்ளது. தேர்தல் வெற்றி குறித்து அந்த கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் உத்தவ் தாக்கரே பா.ஜனாவுடன் சேர மாட்டார் என கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் உத்தவ் தாக்கரேயை சந்தித்தேன். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மராட்டியத்தில் பெற்ற வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து கூறினேன். அவர் கூட்டணி மாற வாய்ப்பே இல்லை. அவர் மாநிலத்தில் மீண்டும் மகாவிகாஸ் அகாடி (இந்தியா) கூட்டணி ஆட்சியை அமைக்க தயாராகி வருகிறார்.
மாநில அரசுக்கு எதிராக மக்கள் இடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த புதன் கிழமை டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர் பா.ஜனதா கூட்டணியில் சேரப்போவதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கட்சி சார்பில் சஞ்சய் ராவத் எம்.பி. கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.